புதுச்சேரியில் பழைய முறையில் ஆசிரியர் நியமனம்: முதல்வர் ரங்கசாமி தகவல்

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: “புதுச்சேரியில் ஆசிரியர் நியமனத்தில் விரைவில் கொள்கை முடிவு எடுக்கப்பட்டு பழைய முறையில் ஆசிரியர் நியமனம் நடைபெறும்” என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

புதுச்சேரியில் ஆரம்பப் பள்ளிக்கு 146 ஆசிரியர்களை தேர்வு செய்ய உள்ளனர். அவர்களை மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்வதா? அல்லது தேர்வு நடத்தி தேர்வு செய்வதா? என அமைச்சரவையில் முடிவு செய்யப்படும் என்று கல்வியமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்திருந்தார். ஆசிரியர்களை மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்ய உரிய அறிவிப்பை வெளியிடுமாறு சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து அதிமுகவினர் வலியுறுத்தினர்.

அதைத்தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''புதுவையில் ஆசிரியர்கள் மதிப்பெண் அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். ஆனால், கடந்த காங்கிரஸ் ஆட்சியில் துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி தேர்வு அடிப்படையில் ஆசிரியரை நியமிக்க உத்தரவிட்டுள்ளார். ஆகவே, தற்போது ஆசிரியர் நியமனம் தொடர்பாக அமைச்சரவையில் கொள்கை முடிவெடுக்கும் நிலையுள்ளது. விரைவில் கொள்கை முடிவெடுக்கப்பட்டு பழைய முறையில் ஆசிரியர் நியமனம் நடைபெறும்'' என்று தெரிவித்தார்.

டெல்லி பயணம் பற்றி தங்கள் கருத்து என்ன என்று கேட்டதற்கு, "புதுடெல்லிக்கு நிதி ஆயோக் கூட்டம் மற்றும் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு நிகழ்ச்சிக்கான பயணம் திருப்திகரமாக இருந்தது" என்றார். புதுடெல்லி சென்ற நோக்கம் நிறைவேறியதா என்று கேட்டதற்கு, "இது எந்த நோக்கத்தில் கேள்வி கேட்கப்படுகிறது என புரியவில்லை. புதுவையில் நலத்திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு நிதி அளிக்கவேண்டும். அதிகாரிகள் திட்டம் முடங்கும் வகையில் செயல்படக்கூடாது" என்று குறிப்பிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE