டெங்கு வராமல் தடுப்பது, வந்த பின்னர் என்ன செய்வது?- வழிகாட்டும் அரசு சித்த மருத்துவர்கள்

By மு.அப்துல் முத்தலீஃப்

டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க என்னென்ன முறைகளை கையாளவேண்டும், நிலவேம்பு கசாயம் ஏன் அவசியம், ரத்த தட்டுகள் இழப்பை எப்படி சரிகட்டுவது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு சித்த மருத்துவர் சங்கத்தினர் விளக்கம் அளித்தனர்.

சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஆரோக்கிய சித்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர். சிவராமன், மாநில மருந்து கட்டுப்பாடு அலுவலர் பிச்சையா குமார், குழந்தைகள் நல உதவி பேராசிரியர் அரசு சித்த மருத்துவ கல்லூரி மருத்துவர் ஸ்ரீராம் உள்ளிடோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது.

நமது பாரம்பரிய சித்த மருத்துவத்தில் 64 வகையான காய்ச்சல்களை அன்றே பிரித்தறிந்து சிகிச்சை அளித்துள்ளனர். இன்றைக்கு உயிர்க்கொல்லியான டெங்கு பற்றிய புரிதல் இல்லாத்க காலத்திலேயே அதன் குறிகுணங்களை ஒத்த பித்த ஜுரங்களுக்கு மிக அதிக பயனாக அவர்கள் கொடுத்த நிலவேம்பு குடிநீர்தான் தற்போது டெங்குக்கான முதல் நிலை தேர்வாக சித்த மருத்துவத்தில் பயன்படுகிறது.

2006 ல் பெரிய அளவில் வந்த சிக்குன் குனியாவுக்கும் நிலவேம்பு கசாயம் கட்டுப்படுத்தியதையும் நம் மாநில அரசும், மத்திய அரசும் புள்ளியியல் ரீதியாக ஆய்வு செய்து உறுதிப்படுத்தியது.

அதன் பின்னர் மாநில அரசின் கீழ் இயங்கும் கிங் ஆய்வகமும் நிலவேம்பு வைரஸைக் கட்டுப்படுத்த செய்வதையும் அது நமக்கு அது நோய் எதிர்ப்பாற்றலை தருவதையும், ஆய்வு செய்து சொன்னது.

காய்ச்சல் வந்த அத்தனை நபரும் நிலவேம்பு கசாயத்தை முதல் தேர்வாய் எடுக்க வேண்டும். காய்ச்சல் வந்தால் பெரியவர்கள் 50 மி.லி. இரு வேலை உணவுக்கு முன்னர் காலை மாலை என ஐந்து நாட்களும், குழந்தைகள் மற்றும் சிறார்கள்(3 முதல் 12 வயதுக்கு உட்பட்டோர்) 15-30 மிலி அளவு அல்லது உடல் எடை மற்றும் பிற விஷயங்களை மருத்துவர்கள் மாற்றக்கூடும்.

அதே போல் ரத்த தட்டுகள் (blood platelets level) குறையும் பட்சத்தில் அதை தடுக்க 1. ஆடாதொடைச்சாறு(15-30 மிலி வரை) ஆடா தொடை மணப்பாகு(5-10 மிலி வரை) 2. பப்பாளிச் சாறு(10-30 மிலி அளவு கொடுக்கவேண்டும்.

தாழ் தட்டுகள்(very low blood platelets) சூழலிலும் தொடர்ந்து தட்டுகள் பின்னடையும் போதும் நவீன மருத்துவம் வழிகாட்டுதல் அவசியம். தட்டுகள்(blood platelets) நேரடியாக ஏற்றப்படவேண்டும். அப்போது நவீன மருத்துவத்தை நாடவேண்டும், சில நேரம் IV Fluids அவசியப்படலாம் இச்சமயங்களில் சித்த மருத்துவரும், நவீன மருத்துவரும் இணைந்து செயலாற்ற வேண்டி இருக்கும்.

வெளியில் விற்கும் நிலவேம்புப் பொடியை பயன்படுத்தி கசாயம் தயாரிக்கலாமா?

கூடாது. நிலவேம்பு ஜுர சூரணம் என்ற பொடியை தகுதியான மருத்துவர்கள் தயாரித்து விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அது அங்கீகரிக்கப்பட்ட பொடியா என்று கவனித்து அதைத்தான் வாங்கி பயன்படுத்தப் வேண்டும். சாதாரணமாக நில வேம்பு பொடியால் எந்த உபயோகமும் இல்லை.

நில வேம்பு ஜுர சூரணப்பொடி எங்கெங்கு கிடைக்கும்?

அனைத்து மருந்தகங்களிலும் கிடைக்கிறது. இது தவிர இம்ப்காப்ஸ் என்ற நிறுவனம் மிஸ்டு கால் கொடுத்தால் வீடு தேடி கொண்டு வந்து கொடுக்கிறார்கள். தற்போது உள்ள சூழ்நிலையில் பாதி விலையில் அதை சேவையாக கருதி கொடுக்கிறார்கள்.( செல்போன் எண்.9710105678, 9710205678).

நிலவேம்பு சூரணபொடியில் என்னென்ன கலக்க வேண்டும்?

நிலவேம்பு, மிளகு, சுக்கு, கோரைக்கிழங்கு, வெட்டிவேர், விலாமிச்சவேர், சந்தனத்தூள், பற்படகம், பேய்ப்புடல், எனும் ஒன்பது பொருட்கள் சேர்க்கப்பட வேண்டும். இம்மூலிகைகள் தனித்தனியே நோய் எதிர்ப்பாற்றல் உள்ளன.

நிலவேம்பு கசாயத்தை டெங்கு காய்ச்சல் இல்லாமல் குடிக்கக் கூடாது என்கிறார்களே?

அப்படி எல்லாம் இல்லை வாரம் ஒரு தடவையாவது குடிக்க வேண்டும். இது ஒரு நல்ல தடுப்பாக அமையும்.

நிலவேம்பு கசாயத்தை காய்ச்சல் இல்லாமல் குடித்தால் ஆண்மைக்குறைவு ஏற்படும் என்கிறார்களே?

முற்றிலும் தவறானது. வலைதளத்தில் எழுதுவதை எல்லாம் நம்புவதை முதலில் நிறுத்துங்கள். கண்டவனும் கண்டதை எழுதுவது படிக்கும் நம்மை தவறான திசை நோக்கி திருப்பி விடும். அதற்கென்று ஆய்வு செய்த மருத்துவர்கள், நிபுணர்கள் கூறுவதை நம்புங்கள்.

சாதாரணமாக நில வேம்பு கசாயத்தை எப்படி அருந்த வேண்டும்?

உணவுக்கு முன்னர் அருந்த வேண்டும், அல்சர் , காஸ்ட்ரிக் பிரச்சினை உள்ளவர்கள் உணவுக்கு பின்னர் அருந்தலாம்.

குடித்தவுடன் சர்க்கரை போட்டுக்கொள்கிறார்களே அது சரியா?

தவறான ஒன்று. நமக்கு கசப்பு வேண்டும் அதுதான் உடலுக்கு நல்லது. அதே நேரம் முடியாவிட்டால் அல்லது குழந்தைகளுக்கு கொடுக்க தேனை உபயோகப்படுத்தலாம். அது நல்ல இனிப்பு.

காய்ச்சல் வந்தவர்கள் என்னென்ன செய்ய வேண்டும்?

முதலில் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். டெங்கு காய்ச்சலும் சாதாரணமாக வந்துசெல்லும் காய்ச்சல் தான். அதற்கு வேண்டிய முறையான சிகிச்சை தகுந்த நேரத்தில் எடுக்க வேண்டும். காய்ச்சல் வந்து மூன்று நாட்களுக்கு பின்னரே அதன் அறிகுறி தெரியும். நில வேம்பு கசாயம் குடிக்கலாம், பப்பாளி சாறு குடிக்கலாம். ஆனால் டெங்கு கட்டுப்படவில்லை, பிளட் லெட் குறைகிறது என்றால் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகிவிட வேண்டும். போன் மாரோவை வைரஸ் தாக்கினால் அது ஆபத்துதான்.

உணவில் இனிப்பை குறைக்க வேண்டும், கசப்பு அதிகம் சேர்க்க வேண்டும். உணவில் காரம் தேவைப்படும் போதெல்லாம் மிளகாய்த்தூளுக்கு பதில் மிளகை அதிகம் பயன் படுத்தலாம்.

தினசரி அருந்தும் நீரின் அளவு 2.5 லிட்டர் முதல் 3 லிட்டர் வரை இருக்கலாம். காய்ச்சல் நேரத்தில் நீரோடு சேர்த்து பழச்சாறு, இளநீர், சீரகத்தண்ணீர் முதலியன அதிக இடைவெளியில் கொடுக்க வேண்டும்.

என்னென்ன உணவுப்பழக்கங்களை கையாள வேண்டும்?

அரிசி கஞ்சி, தானியக்கஞ்சி இரு வேளை கொடுக்க வேண்டும். கீரை சூப் கொடுக்க வேண்டும். மீனைத்தவிர புலால் உணவுகளை தவிர்த்துவிட வேண்டும். எண்ணெயில் பொறித்த உணவுகளை தவிர்த்து விட வேண்டும்.

அன்னாசிப்பூவை உணவில், தேநீரில் சேர்க்கவும், இலவங்கப்பட்டை போட்ட தேநீர் அருந்தலாம். திரிகடுகம் காப்பி அருந்தலாம். இவை அத்தனையும் நோய் எதிர்ப்பு சக்தி மிக்கது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்