3 அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாகும் நிலைக்கு அலட்சியமே காரணம்: மாநில சுகாதாரத் துறை மீது பேராசிரியர்கள் குற்றச்சாட்டு

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை: தமிழகத்தில் 3 அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாகும் நிலை ஏற்பட்டதற்கு மாநில சுகாதாரத் துறை, மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் அலட்சியமே காரணம் என பேராசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சென்னை ஸ்டான்லி, திருச்சி மற்றும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட ‘பயோமெட்ரிக்’ வருகைப்பதிவு முறை, சிசிடிவி கேமராக்கள், பேராசிரியர் பணியிடம் உள்ளிட்டவற்றில் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டு அந்த அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் ரத்து செய்ய முடிவு செய்துள்ளது.

இதனால், நடப்புக் கல்வி ஆண்டில் இந்த 3 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் உள்ள எம்பிபிஎஸ் இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. தேசிய மருத்துவ ஆணையத்தின் இந்த நடவடிக்கை தமிழக மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

பயோமெட்ரிக் வருகைப்பதிவு, சிசிடிவி கேமராக்கள் போன்ற சிறிய குறைபாடுகளுக்காக மருத்துவக் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்யும் அளவுக்குச் செல்வது தமிழகத்தின் மீது மத்திய அரசு பாகுபாட்டை வெட்ட வெளிச்சமாக காட்டுகிறது என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதை ஆணையத்தின் அதிகாரிகள் ஆய்வு செய்து அங்கீகாரத்தைப் புதுப்பித்து வருகின்றனர்.

எச்சரித்து வந்தோம்: அரசு மருத்துவக் கல்லூரிகளில் 450 பேராசிரியர்கள், 550 இணைப் பேராசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. மேலும் பல்வேறு வசதி குறைபாடுகள் இருப்பதால் அங்கீகாரம் ரத்தாகும் அபாயம் இருப்பதாக கடந்த 2 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் எச்சரித்து வந்தது.

ஆனால், அதைக் கண்டுகொள்ளாமல் மாநில சுகாதாரத் துறையும், மருத்துவக் கல்வி இயக்குநரகமும் அலட்சியமாக இருந்தன. அதன் விளைவாக தற்போது 3 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

பேராசிரியர்கள் பற்றாக்குறை இந்த அளவுக்கு இருப்பதற்கு தமிழக அரசு உரிய நேரத்தில் பதவி உயர்வு வழங்காமல் இருப்பதே காரணமாகும். தேசிய மருத்துவ ஆணையம் ஆய்வுக்கு வரும்போது தகுதியானோருக்குப் பேராசிரியர் பதவி உயர்வு கொடுக்காமல் பொய்யான தகவலை கூறச் சொல்வார்கள்.

கடந்த காலங்களில் இந்த எண்ணிக்கை ஒவ்வொரு கல்லூரியிலும் குறைவாக இருந்தது. அதனால் பிரச்சினை வெளியே தெரியவில்லை. தற்போது அரசு மருத்துவக் கல்லூரிகளில் 30 சதவீத பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அதனால்தான் விவகாரம் வெளியே வந்துள்ளது.

நோயாளிகள், மாணவர்களுக்குத் தகுந்தவாறு பேராசிரியர்கள் இருக்கிறார்களா என்பதைப் பார்க்கவே பயோமெட்ரிக் வருகை ஆய்வு செய்யப்படுகிறது. அதிலும் பல்வேறு குளறுபடிகள் நடப்பதால், தற்போது சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்கின்றனர்.

இதை தமிழக சுகாதாரத் துறை சிறிய குறைபாடுகள் என்று எளிதாகக் கடந்துசெல்ல முயற்சிப்பது, பிரச்சினைக்குத் தீர்வை ஏற்படுத்தாது. உடனடியாக பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதுடன், கல்லூரிகளில் தேவையான வசதிகளை மேற்கொள்வதுதான் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாகும் என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE