சென்னை: டோக்கியோவில் நடைபெற்ற ஜப்பான் வாழ் தமிழர்களின் வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், எங்கு வாழ்ந்தாலும் தாய்த்தமிழ் நாட்டை மறக்காதீர்கள்; தமிழ்நாட்டுக்கு வாருங்கள் என்று தெரிவித்தார்.
சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திடவும், தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு தற்போது ஜப்பானில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணம் மேற்கொண்டு வருகிறார்.
ஜப்பான் வாழ் தமிழர்கள் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி டோக்கியோவில் இன்று (28.5.2023) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ஜப்பான் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தமிழ் பாரம்பரிய கலாச்சாரத்தை போற்றும் வகையில் நடைபெற்ற தமிழர் தற்காப்புக் கலையான வர்மக் கலை, பரதநாட்டியம், மிருதங்க இசை நிகழ்ச்சி, சிலம்பாட்டம், மயிலாட்டம், கும்மியாட்டம், தப்பாட்டம் போன்ற நிகழ்ச்சிகளை முதல்வர் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து, ஜப்பான் நாட்டில் தமிழ் பயிலும் மாணவர்களுக்கு சான்றிதழ்களையும், ஜப்பான் தமிழ்ச் சங்கங்களின் சார்பில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார்.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில், முதல்வர் முன்னிலையில், தமிழ் இணைய கல்வி கழகத்தின் மூலம் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் குழந்தைகள் தமிழ்ச் மொழியை கற்றுக் கொள்ளும் வகையில் ஜப்பானில் உள்ள வெளிநாடு வாழ் தமிழ் இந்தியர் சங்கம் மற்றும் ஜப்பான் தமிழ்ச் சங்கம் ஆகிய சங்கங்களுடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், "என்னுடைய நிகழ்ச்சி நிரலில் எப்போதுமே, அரசு நிகழ்ச்சி அல்லது அரசியல் நிகழ்ச்சிகளாக ஓய்வில்லாமல் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் நான் கலந்து கொண்டு வருகிறேன்.
» கரூர் வருமான வரித்துறை சோதனையில் ஆவணங்கள், ரூ. 3.5 கோடி பறிமுதல்?
» கொள்ளையடிக்கப்படும் இயற்கை வளம் | அரசு நடவடிக்கை எடுக்க அன்புமணி வலியுறுத்தல்
ஆனால் அதற்கெல்லாம் மாறாக இங்கு நான் கண்ட கலைநிகழ்ச்சிகளும், நீங்கள் தந்திருக்கக்கூடிய உற்சாக வரவேற்பும், என்னையே நான் மறந்து போய் இருக்கிறேன். மறந்து மட்டுமல்ல, நெகிழ்ந்து போய் இருக்கிறேன். உணர்ச்சியோடு உங்கள் முன்னால் நின்று கொண்டு இருக்கிறேன். மிக நேர்த்தியாக நம்முடைய கலை நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டியிருக்கக்கூடிய நம்முடைய மாணவச் செல்வங்கள், நம்முடைய குழந்தைகள், கலையை எந்த அளவிற்கு வெளிப்படுத்தி காட்டியிருக்கிறார்கள் என்பதை பார்க்கும்போது நான் உள்ளபடியே மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கக்கூடிய மாணவச் செல்வங்களுக்கு, குழந்தைகளுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த அரங்கிற்குள் நான் வந்ததிலிருந்து நான் தமிழகத்தில் தான் இருக்கிறேனா என்ற சந்தேகம் என்னுடைய உணர்விலே கலந்திருக்கிறது. அந்த அளவிற்கு உங்களுடைய வரவேற்பும், உங்களுடைய உற்சாகமும் வெளிப்படுத்தக்கூடிய நேரத்தில் நான் அதை உணர்கிறேன். அதற்காக நான் மீண்டும் மீண்டும் உங்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான வணக்கத்தை, நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
சூரியன் உதிக்கும் நாடு, ஜப்பான்! ஜப்பான் என்றால், உழைப்பு! சுறுசுறுப்பு! உழைப்பாளர்களின் நாடு இது. வீழ்ந்த வேகத்தில் எழுச்சி பெற்ற நாடு இது! இரண்டாம் உலகப் போரின் போது அணுகுண்டுகள் வீசப்பட்டு பெரும் பாதிப்பு ஏற்படுத்தப்பட்டாலும், மிகக் குறுகிய காலத்தில் எழுந்து நின்று, உலகில் தவிர்க்க முடியாத பொருளாதார சக்தி மிகுந்த நாடாக ஆகியிருக்கிறது ஜப்பான்.
ஜப்பான் மக்களின் உழைப்பால்தான் இது சாத்தியமானது. ஜப்பான் - தமிழ் இரு மொழிகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதாக மொழி ஆய்வாளர்கள் சொல்வார்கள். இரண்டும் ஒரே மாதிரியான இலக்கணக் கட்டமைப்பு கொண்டவை என்று சொல்லப்படுகிறது. தமிழர்கள் ஜப்பான் மொழியைப் படிப்பதிலும் ஆர்வம் காட்டுகிறார்கள். ஜப்பானியர்களும் தமிழைக் கற்க முயற்சிக்கிறார்கள்.
பேராசிரியர் சுசுமு ஓனோ தனது வாழ்க்கையில் 30 ஆண்டுகள் தமிழ் - ஜப்பானிய மொழிகளுக்கு இடையிலான தொடர்புகளை ஆய்வு செய்திருக்கிறார். தமிழ் படிப்பதற்காக தமிழகத்துக்கு வந்த சுசுமு ஓனோ, சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் பொற்கோவிடம் தமிழ் கற்றார். அமைப்பு ரீதியாகவும், இலக்கண வழியாகவும் இரண்டு மொழிகளுக்கும் ஒற்றுமை இருக்கிறது என்பதை 1970-ஆம் ஆண்டே கண்டுபிடித்துச் சொன்னவர் அவர்.
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதான யயோய் காலத்து ஈமத் தாழிகளில் உள்ள எழுத்துகளுக்கும், தமிழகத்தின் பெருங்கற்காலப் பண்பாட்டின் ஈமத் தாழிகளில் உள்ள எழுத்துகளுக்கும் இடையே ஒற்றுமை இருப்பதைக் கண்டுபிடித்தவர் அவர். சில சொற்களைச் சொல்லி அவை தமிழில் இருந்து ஜப்பான் மொழிக்கு வந்தவை என்று சுசுமு ஓனோ சொல்கிறார். அவர் எழுதிய ஜப்பானிய மொழியின் வேர்களைத் தேடி என்ற நூல் மொழி அறிஞர்களால் வாசிக்கப்பட்ட புத்தகமாக உள்ளது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் யயோய் காலத்தில் தமிழர்கள் ஜப்பான் நாட்டுக்கு வணிக நோக்கில் பயணம் செய்து வந்துள்ளார்கள். நெல் விதைப்பதற்கு முந்தைய சடங்குகளை தமிழர்கள்தான் இங்கு கொண்டு வந்து அறிமுகம் செய்தார்கள் என்று அவர் குறிப்பிடுகிறார். தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளுக்கும் ஜப்பானிய அறுவடை திருவிழாவுக்கும் ஒற்றுமை இருப்பதை இவர் எழுதி இருக்கிறார்.
தமிழறிஞர் ஐராவதம் மகாதேவன் ஜப்பானுக்கு ஒருமுறை வந்திருந்தபோது டோக்கியோவுக்கும் ஒசாகாவுக்கும் இடையே இருக்கும் நகோயா என்ற நகரத்தை பார்த்துள்ளார். அங்கு இருந்த பெயர் பலகை ஒன்றில் இருந்த எழுத்து தமிழ் பிராமி எழுத்துருவின் சாயலில் இருந்துள்ளது. பிராமியில் எழுதப்பட்ட எழுத்தின் பொருளும், அதற்கான தமிழ்ச் சொல்லின் பொருளும் ஒரே மாதிரி இருப்பதை அவர் சொல்லி இருக்கிறார்.
யூகோ புகுரோய் என்ற ஜப்பானியப் பேராசிரியரும், இரண்டு தமிழ்ப் பேராசிரியர்களும் இணைந்து தமிழ்மொழி மூலம் ஜப்பானிய மொழி கற்க நூல்களை எழுதியுள்ளார்கள். நொபுரு கரோஷிமா ஜப்பான் அறிந்ததை விட தமிழ்நாடு அதிகமாக அறிந்து வைத்திருக்கிறது. உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவராக இருந்தவர் அவர். சீனாவில் தமிழ்க் கல்வெட்டுகள் இருப்பதாகச் சொன்னவர் அவர்.
தமிழ்ப் பண்பாட்டை விளக்குவதற்காக ஜப்பானிய மொழியில் ஆவணப்படம் எடுத்தவர் அவர். இன்னொரு குறிப்பிடத்தக்க வரலாற்று அறிஞர் பேராசிரியர் ஷூ ஹிக்கோசக்கா. இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில்தான் தனது முனைவர் பட்ட ஆய்வை ‘தமிழகத்தில் புத்த சமயத்தின் வளர்ச்சி’ என்ற தலைப்பில் நிறைவு செய்தார். பின்னர் சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையையும் ஜப்பானிய மொழியில் மொழிபெயர்த்தார். பழந்தமிழர் வாழ்வை தமிழ் இலக்கியங்கள் சொல்வதைப் போலவே ஜப்பானிய பழைய இலக்கியங்கள் ஜப்பானிய மக்களின் பண்பாட்டை பறைசாற்றுபவையாக உள்ளன. தமிழ் இலக்கிய நூல்களை ஜப்பான் மொழியில் அதிகமாக மொழிபெயர்க்கக் காரணமாக இருந்தவர் என்ற அடிப்படையில் சேலம் ஓமலூரைச் சேர்ந்த சொ.மு.முத்து என்பவருக்கு 2007-ஆம் ஆண்டு ஜப்பான் நாடு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது.
இப்படி தமிழகத்திற்கும் ஜப்பானுக்குமான தொடர்பு மிக மிக அதிகம். இத்தகைய பெருமைகளைக் கொண்ட ஜப்பான் நாட்டில் உள்ள தமிழ்ச் சங்கங்களின் சார்பில் நடைபெறக்கூடிய இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன். நம் அடுத்த தலைமுறையான குழந்தைகளுக்கு தமிழைப் படிக்க ஊக்குவிப்பது; ஜப்பானில் உள்ள பள்ளிகளில் தமிழ் நூலகங்கள் அமைக்க உதவி புரிவது; பள்ளிகளுக்கிடையேயான தமிழ் சார்ந்த கலைநிகழ்ச்சிகள் நடத்துவது; போட்டிகள் நடத்துவது; தமிழ் இலக்கியத்தை பரப்புவது; தமிழகத்திற்கு வெளியே வாழும், தமிழ் எழுதப் படிக்கத் தெரியாத தமிழர்களுக்குத் தமிழைக் கற்றுக்கொடுப்பது; தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிப்பது எனப் பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்து வரும் தமிழ்ச் சங்கத்தினரைப் நான் மனதார பாராட்டுகிறேன். தமிழைக் காப்பது தமிழினத்தைக் காப்பது ஆகும். அதைத் தொடர்ச்சியாகச் செய்யுங்கள்!
அதற்குத் தேவையான உதவிகளை தமிழக அரசும் - திராவிட முன்னேற்றக் கழகமும் செய்யும் என உறுதி அளிக்கிறேன். படிப்பு - வணிகம் - வேலைவாய்ப்பு உள்ளிட்ட தேடல்களுக்காக பல்வேறு நாடுகளில் பரவி வாழும் தமிழர்கள் அனைவரையும் காக்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது. அந்தப் பொறுப்புணர்வுடன்தான் 2010-ஆம் ஆண்டு, தமிழ்நாடு அரசு வெளிநாடுவாழ் தமிழர்களின் துயரங்களை களைந்திட - வெளிநாடுவாழ் தமிழர் நலப்பிரிவு ஒன்றை உருவாக்கி அரசாணை வெளியிட்டதுடன், வெளிநாடுவாழ் தமிழர்களின் நலம் பேணிட வாரியம் ஒன்று அமைத்திடவும் சட்டமுன்வடிவை உருவாக்கியது.
ஆனால் தொடர்ந்து வந்த அரசியல் மாற்றங்களின் காரணமாக இந்த முயற்சிகளில் சிறு தொய்வு ஏற்பட்டது. எனினும் தற்போதைய திராவிட முன்னேற்றக் கழக அரசு தனது தேர்தல் அறிக்கையில் சொன்னபடி, அயலகத் தமிழர் நலனுக்கென தனியே ஒரு துறையை உருவாக்கியுள்ளதுடன், அதற்கென தனி அமைச்சரும் நியமிக்கப்பட்டு, அயலகத் தமிழர்களின் உடனடி தேவைகள் உடனுக்குடன் சிறப்பான முறையில் தீர்த்துவைக்கப்பட்டு வருகிறது. அயலகத் தமிழர்களின் நலன் காத்திட தனி வாரியம் ஒன்று அமைக்கப்படும் என்று நம்முடைய தலைவர் கருணாநிதி அறிவித்து இருந்தார். அதனையும் செயல்படுத்திக் காட்டி இருக்கிறோம்.
ஒரு தலைவர் மற்றும் 14 உறுப்பினர்களைக் கொண்ட அயலகத் தமிழர் நலவாரியத்தை அமைத்து ஆணையிடப்பட்டு உள்ளது. இந்த வாரியத்தின் மூலமாக, விபத்து, ஆயுள் காப்பீடு திட்டம் மற்றும் மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு அடையாள அட்டை வழங்க, அயலகத் தமிழர் குறித்த தரவு தளம் ஏற்படுத்துதல். வெளிநாடுகளில் புலம்பெயர்ந்துள்ள தமிழர்களுக்கு எனத் தனியாக சட்ட உதவி மையம் அமைப்பது உள்ளிட்ட அயலகத் தமிழர்களின் நலன் காக்கும் திட்டங்களைச் செயல்படுத்திட தமிழக அரசு செயலாற்றி வருகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜனவரி 12-ஆம் நாள் அயலகத் தமிழர் நாளாகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. "வேர்களைத் தேடி" என்ற திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் உலகெங்குமிருந்து 200 இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு அரசின் செலவில் இரண்டு வார கால பண்பாட்டுச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்படுகிறது. தமிழ் இணையவழிக் கல்வி பரப்புரைக் கழகத்தின் மூலம் ‘கற்றலும் கற்பித்தலும்’ என்ற அடிப்படையில் 53 மாணவர்கள் தமிழைப் பயின்று வருகின்றனர். இப்படி தமிழ்ப் பயிலும் இந்த இளந்தளிர்கள், ஜப்பான் நாட்டில் உள்ள நம் தமிழ்ச் சொந்தங்களிடையே - தமிழ் கற்பது கற்பிப்பதில் பெரும் எழுச்சியை உருவாக்குவார்கள் என்ற நம்பிக்கை இன்று இந்த விழாவின் மூலம் எனக்கு ஏற்பட்டுள்ளது. அன்பு மிகுந்த உங்களது வரவேற்பை நான் எந்நாளும் மறக்க மாட்டேன். எங்கு வாழ்ந்தாலும் தாய்த்தமிழ் நாட்டை மறக்காதீர்கள். தமிழ்நாட்டுக்கு வாருங்கள்.
உங்கள் பார்வைக்காக கீழடி அருங்காட்சியகம் காத்திருக்கிறது. திருநெல்வேலியில் பொருநை அருங்காட்சியகம் அமைக்க அடிக்கல் நாட்டி இருக்கிறேன். கடந்த காலப் புகழோடு - நிகழ்கால உழைப்பும் சேரட்டும். நிகழ்கால உழைப்பானது எதிர்கால சிறப்பை உருவாக்கித் தரட்டும் என்று சொல்லி, இந்த சிறப்பான வரவேற்பு நிகழ்ச்சியிலே உங்களோடு நானும் பங்கேற்று, இந்த இனிய வரவேற்பை தந்திருக்கக்கூடிய உங்களுக்கு எல்லாம் இந்த நேரத்திலே தமிழ்நாட்டினுடைய முதல்வராக மட்டுமல்ல, என்றைக்கும் உங்களில் ஒருவனாக இருந்து, அந்த வகையில், என்றைக்கும் உங்களுக்கு நன்றி உள்ளவனாக இருப்பேன், உங்களுக்கு என்றைக்கும் துணை நிற்பேன் என்பதை இந்த நேரத்தில் எடுத்துச்சொல்லி, இந்த வரவேற்பு வழங்கிய அத்தனை பேருக்கும் மீண்டும் மீண்டும் எனது இதயபூர்வமான நன்றியை தெரிவித்து, என உரையை நிறைவு செய்கிறேன்" என தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago