கரூர் | வருமான வரித் துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனை: தாக்குதல் தொடர்பாக 100-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு

By செய்திப்பிரிவு

சென்னை / கரூர்: அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி மற்றும் ஒப்பந்ததாரர்கள் வீடு, அலுவலகங்களில் 2-வது நாளாக நேற்றும் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். மேலும், அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக 100-க்கும் மேற்பட்டோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தமிழக மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி மற்றும் டாஸ்மாக், மின்துறை ஒப்பந்ததாரர்களின் வீடுகள், அலுவலகங்கள் என 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.

இதில், கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீட்டில் நடந்த சோதனையின்போது, வருமான வரித் துறை அதிகாரிகளுடன் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அதிகாரிகளின் கார் மீது தாக்குதல் நடத்தினர். இதேபோல, சோதனைக்கு சென்ற அனைத்து இடங்களிலும் எதிர்ப்புக் கிளம்பியதால் கரூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வருமான வரித் துறைஅதிகாரிகள் தஞ்சம் அடைந்தனர்.கரூரில் நடந்த சோதனையின்போது பிரச்சினை ஏற்பட்டதால், சிஆர்பிஎஃப் வீரர்கள் வரவழைக் கப்பட்டனர்.

காட்டுமுன்னூர் கல்குவாரியில் சோதனை நடத்திய அதிகாரிகள் கணினி மற்றும் சில ஆவணங்களை கைப்பற்றி, அங்குள்ள ஓர் அறையில் வைத்து சீல் வைத்தனர்.

இதற்கிடையே, தங்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாக காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில், 100-க்கும் மேற்பட்டோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதேபோல, வருமான வரித் துறை ஆய்வாளர் காயத்ரி தன்னை தாக்கியதாக, குமார் என்பவர் அளித்த புகாரின் பேரில் காயத்ரி மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சிஐஎஸ்எஃப் வீரர்கள் பாதுகாப்பு: இந்நிலையில், 2-வது நாளாக நேற்றும் வருமான வரித் துறை சோதனை நீடித்தது. சென்னை ராஜா அண்ணாமலைபுரம், ஆழ்வார்பேட்டை, அபிராமபுரம், விருகம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமார் மற்றும் ஒப்பந்ததாரர்கள் வீடு, அலுவலகங்களில் சோதனை நடந்தது.

கரூர் காந்தி கிராமத்தில் ஒப்பந்ததாரர் எம்சிஎஸ்.சங்கரின் நண்பர் பிரேம்குமார், ஆசி டெக்ஸ் செல்வராஜ், துணை மேயர் சரவணன் ஆகியோரது வீடுகள், கொங்கு மெஸ் மணி வீடு மற்றும் அலுவலகம், ஆண்டாங்கோவிலில் உள்ள பாலவிநாயகா கிரஷர் உரிமையாளர் வீடு மற்றும் காட்டுமுன்னூரில் உள்ள கிரஷர், பவித்திரத்தில் உள்ள எம்சிஎஸ்.சங்கருக்கு சொந்தமான ரெடிமிக்ஸ் நிறுவனம், பாலவிநாயகா கிரஷர் உரிமையாளர் தங்கராஜ் வீடு ஆகிய இடங்களில் வருமான வரித் துறையினர் நேற்று சோதனை மேற்கொண்டனர்.

நேற்று அனைத்து இடங்களிலும் போலீஸார், சிஐஎஸ்எஃப் வீரர்கள் பாதுகாப்புடன் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல, கோவை, ஈரோடு உள்ளிட்ட இடங்களிலும் 2-ம் நாளாக நேற்று சோதனை நடைபெற்றது.

திட்டமிட்ட தாக்குதல்: கரூரில் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனையிடச் சென்றபோது, திமுகவினர் திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தியதாக வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக செந்தில்பாலாஜியின் ஆதரவாளர் கொங்கு மெஸ் சுப்பிரமணி, செல்வராஜ் என்பவருடன் பேசிய ஆடியோ பதிவு கிடைத்துள்ளதாக வருமான வரித் துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திவிட்டு, ரொக்கம், ஆவணங்களை அள்ளிச் செல்லுமாறு செல்வராஜுக்கு கொங்கு மெஸ் சுப்பிரமணி உத்தரவிட்டதை அந்த ஆடியோ ஆதாரம் உறுதி செய்துள்ளதாகவும், இதை காவல் துறையில் சமர்ப்பிக்க வருமான வரித் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE