கம்பம் நகருக்குள் புகுந்த ‘அரிசி கொம்பன்' யானை - அலறியடித்து ஓடிய மக்கள்; 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

By என்.கணேஷ்ராஜ்

கம்பம்/பொள்ளாச்சி: தேனி மாவட்டம் கம்பம் நகருக்குள் நேற்று காலை 'அரிசிக் கொம்பன்' யானை நுழைந்ததால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பாதுகாப்பு கருதி கம்பத்தில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டதுடன் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கான நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல், வட்டக்கானல் வனப்பகுதியில் அரிசிக் கொம்பன் என்னும் காட்டு யானையின் நடமாட்டம் அதிகம் இருந்தது. இதுவரை 8 பேர் இந்த யானை தாக்கி இறந்துள்ளனர். ரேஷன் கடைகளை தாக்கி அரிசியை விருப்ப உணவாக உண்டதால் இதனை கேரளாவில் ‘அரிசிக் கொம்பன்’ யானை என்ற பெயரிட்டு அழைத்தனர்.

தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருந்ததால் இந்த யானையை காட்டுப் பகுதிக்கு விரட்ட கேரள வனத்துறையினர் முடிவு செய்தனர்.

இதன்படி, கடந்த ஏப்.29-ம் தேதி இந்த யானைக்கு மயக்க ஊசி போட்டு தமிழக எல்லையான பெரியாறு புலிகள் காப்பகம் முல்லைக்கொடி எனும் வனப்பகுதியில் விட்டனர். முன்னதாக இதன் நடமாட்டத்தை தெரிந்து கொள்ள வசதியாக இதன் கழுத்தில் சாட்டிலைட் ரேடியோ காலர் பொருத்தப்பட்டது.

இந்த யானை கண்ணகி கோயில் வழியே மேகமலை வனப்பகுதிக்குள் அடுத்தடுத்து நுழைந்தது. இதனால் மேகமலை பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை இந்த யானை தனது வாழ்விட வழித்தடம் தேடி கம்பம் நகருக்குள் புகுந்தது.

இதனால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். கூச்சலிட்டும், வாகனங்களின் ஹாரனை ஒலிக்கச் செய்தும் பொதுமக்களை பலரும் எச்சரித்தனர். இதனால் மிரண்டுபோன யானை கம்பம் துணை மின் நிலையம் அருகே சென்றது. பாதுகாப்பு கருதி கம்பம், புதுப்பட்டி பகுதி மின்விநியோகம் தடை செய்யப்பட்டது.

பல்வேறு தெருக்கள் வழியே சென்ற யானை கம்பம் கூடலூர் சாலை அருகே உள்ள புளியந்தோப்புக்குள் புகுந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே, மேகமலை புலிகள் வன சரணாலய துணை இயக்குநர் ஆனந்த், மாவட்ட வன அலுவலர் சமர்த்தா, கூடலூர், கம்பம் வனச்சரகர்கள் முரளிதரன், அன்பு உள்ளிட்ட பல அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ட்ரோன் மூலம் யானையை கண்காணித்து டம்மி துப்பாக்கி மூலம் வானத்தை நோக்கி சுட்டு வனப்பகுதிக்குள் அனுப்பும் பணியில் வனத்துறையின ஈடுபட்டனர்.

பொதுமக்கள் பாதுகாப்பு கருதி கம்பம் நகராட்சிப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. புறவழிச்சாலை அருகே யானை உலா வந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

நேற்று மாலை கம்பம் - கூடலூர் மேற்குத் தொடர்ச்சி மலையடிவார வாழைத்தோப்பில் யானை முகாமிட்டிருந்தது.

தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வி. ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், யானை வனப்பகுதிக்குள் செல்லும் வரை 144 தடை உத்தரவு இருக்கும் என கூறியுள்ளார்.

அரிசி கொம்பனை பிடிக்க கும்கி யானை: அரிசிக் கொம்பன் யானையை பிடிக்க ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து 2 கும்கி யானைகளை வனத்துறையினர் தேனி மாவட்டம் கொண்டு செல்கின்றனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, ‘‘கோழிகமுத்தி யானைகள் முகாமில் இருந்து வனக்காப்பாளர் மாயக்கண்ணன் தலைமையில் 10 பேர் அடங்கிய குழுவினரும், வனக்கால்நடை மருத்துவர் விஜயராகவனும் செல்கின்றனர். இன்று இரவு (நேற்று) கும்கிகள் தேனி சென்றடையும் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்