''வேறு ஏதாவது சொல்லிவிடுவேன்'' - செய்தியாளர் கேள்விக்கு ஆத்திரமடைந்த அமைச்சர் கே.என். நேரு

By இ.ஜெகநாதன்


காரைக்குடி: காரைக்குடியில் செய்தியாளர் ஒருவர் கேள்விக்கு, வேறு ஏதாவது சொல்லிவிடுவேன் என நகர்ப்புற உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆத்திரத்துடன் தெரிவித்தார்.

காரைக்குடி நகராட்சியில் முடிவுற்ற பாதாளச் சாக்கடை திட்டம் தொடக்க விழாவுக்கு வந்திருந்த அமைச்சர் கே.என்.நேருவிடம், உள்ளாட்சி அமைப்புகளில் பெண் உறுப்பினர்களின் அதிகாரத்தில் கணவர்கள் தலையிடுவதாக குற்றச்சாட்டு உள்ளதே என செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு அவர் பதிலளிக்கையில், "பொத்தம் பொதுவாக குற்றச்சாட்டு கூறக்கூடாது. பெண் உறுப்பினர்களின் அதிகாரத்தில் கணவர் தலையிடுவதை முதல்வர் கண்டித்துள்ளார். பெண்களுக்கே தனியாக நிர்வகிக்கும் தகுதி வந்துவிட்டது" என்று கூறினார்.

அப்போது, 'நகராட்சி பெண் உறுப்பினர்களில் பலருக்கும் திறமையாக செயல்படும் அளவுக்கு கல்வி தகுதி இல்லையே? உறுதிமொழி கூட வாசிக்க தடுமாறுகின்றனர்' என்று செய்தியாளர் ஒருவர் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த கே.என்.நேரு, ''வேறு ஏதாவது சொல்லிவிடுவேன்'' என்று கூறிவிட்டு சென்றார்.

முன்னதாக, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சியில் ரூ.140.13 கோடியில் முடிவுற்ற பாதாளச் சாக்கடை திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் தலைமை வகித்தார். மாங்குடி எம்எல்ஏ, நகராட்சித் தலைவர் முத்துத்துரை முன்னிலை வகித்தனர். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால்துறை செயலர் சிவதாஸ்மீனா, நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா, குடிநீர் வடிகால்வாரிய மேலாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி பேசினர்.

பாதாளச் சாக்கடை திட்டத்தை அமைச்சர்கள் கே.என்.நேரு, கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து கே.என்.நேரு பேசியதாவது: காரைக்குடியில் பாதாளச் சாக்கடை பணி 17 கி.மீ.க்கு மட்டும் முடிவடையாமல் உள்ளது. அதற்கும் ரூ.66 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் அப்பணியும் முடிவடையும். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளில் 91.56 கோடியிலும், 11 பேரூராட்சிகளில் ரூ.163.35 கோடியிலும் திட்டப் பணிகள் நடைபெறுகின்றன.

குடிநீர் வடிகால்வாரியம் மூலம் 16.12 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.1,752.73 கோடியில் குடிநீர் திட்டப் பணி நடைபெற்று வருகிறது. மேலும் 2.66 லட்சம் பயன்பெறும் வகையில் ரூ.360 கோடியில் குடிநீர் திட்டப் பணி செயல்படுத்தப்பட உள்ளது. நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல்துறை மூலம் மட்டும் சிவகங்கை மாவட்டத்தில் ரூ.2,507.77 கோடியில் திட்டப் பணிகள் நடைபெறுகின்றன.

இனி நகரங்களில் குப்பை கிடங்குகளுக்கு அவசியம் இல்லாதபடி குப்பை உருவாகும் இடத்திலேயே தரம் பிரித்து அழிக்கப்படும்" இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE