“அண்ணாமலையுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார்” - சவாலை ஏற்ற அமைச்சர் பொன்முடி

By எஸ். நீலவண்ணன்

விழுப்புரம்: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் மும்மொழிக் கொள்கை குறித்து விவாதிக்க தயார் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் இன்று விழுப்புரம் திமுக தெற்கு மாவட்ட செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மாநில துணை பொதுச் செயலாளரான உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: "பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் கருத்துகளுக்கு, நான் பதிலளிக்கவேண்டிய பொறுப்பும், கடமையும் எனக்கு இருக்கிறது. நேரடியாக விவாதிக்க தயார் என்று சொல்லியிருக்கிறார். நானும் தயார் என்று ஏற்கெனவே அறிவித்திருக்கிறேன்.

சென்னையில் எந்த இடத்தில், எந்த பொதுக் கூட்டத்தில் அவர் எந்த இடத்தில் பேசுவதற்கு தயார் என்கிறாரோ, அந்த இடத்துக்கு நான் தயார். மும்மொழிக் கொள்கை, தமிழ் வளர்ச்சிக்கு யார் காரணம். தமிழை பொறுத்தவரையில் இருமொழிக்கொள்கை எந்தளவிற்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதையெல்லாம் பற்றி நான் பேச தயாராக இருக்கிறேன். அண்ணாமலைக்கு வரலாறும் தெரியாது, நடக்கிற நிகழ்ச்சியும் தெரியாது. அரசாங்கத்திற்கு தெரியாமலா இது நடந்தவிட்டது என்கிறார். உயர்கல்வித் துறையில், பல்கலைக்கழகங்களில் அரசாங்கத்திற்கு தெரியாமல் என்னெ்னவோ நடக்கிறது. ஓர் உதாரணத்துக்குச் சொல்கிறன்.

வேந்தராக உள்ள ஆளுநர் ஊட்டியில் துணைவேந்தர்கள் கூட்டத்தை கூட்டியிருக்கிறார். அவர்களை அழைத்து இந்தியாவின் புதிய கல்விக் கொள்கையை பற்றி பேசுவதற்காக ஜூன் 5-ம் தேதி கூட்டம் நடைபெறும் என்று துணைவேந்தர்களுக்கெல்லாம் ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார். நான் இணைவேந்தர். எனக்கே அது தெரியாது. அது அண்ணாமலைக்கு தெரிந்துள்ளது. ஆளுநருடன் நெருக்கமாக இருக்கிறார். ஆளுநரும் அப்படித்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். ஆளுநர் இந்தக் கூட்டத்தை கூட்டியது செயலாளருக்கும் தெரியாது. அமைச்சரான எனக்கும் தெரியாது.

தமிழ்நாட்டில் முதலமைச்சர் கல்விக் கொள்கையை வகுப்பதற்காக ஒரு குழுவை நியமித்தார். அதனுடைய அறிக்கை வரவிருக்கிறபோது இந்தக் காலக்கட்டத்தில் துணைவேந்தர்களை எல்லாம் அழைத்து புதிய கல்விக் கொள்கை குறித்து விளக்கம் கொடுப்பதற்கு ஒரு வேந்தருக்கு என்ன உரிமை இருக்கிறது? தமிழக அரசை கலந்தாலோசிக்காமல், அவர்களுடைய கொள்கைக்கு எதிராக செய்ய முற்படுவது யார்? இதுவெல்லாம் அண்ணாமலைக்கு தெரியாதா? அண்ணாமலை தமிழ் வளர்ச்சி, கல்வி மீது அக்கறை உள்ளவராக இருந்தால், ஆளுநரை சந்தித்து இதுகுறித்து விளக்கம் கேட்க வேண்டும். ஏன் அரசுக்கு தெரியாமல் இந்த துணைவேந்தர்கள் கூட்டத்தை நடத்துகிறீர்கள் என்றெல்லாம் கேட்பார் என்று நம்புகிறேன்.

எந்த மொழிக்கும் நாங்கள் எதிர்ப்பானவர்கள் அல்ல. மும்மொழிக் கொள்கையை நாங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. கட்டாயப்படுத்தக் கூடாது என்றுதான் கூறுகிறோம். புதிய கல்விக் கொள்கையில் சமஸ்கிருதம், இந்தி படித்தால் ஊக்கத்தொகை கொடுக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள். தமிழுக்கு எந்தச் சலுகைகளும், முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை. அதையெல்லாம் கொடுக்கதான் தமிழகத்தில் முதலமைச்சர் ஒரு கல்விக் கொள்கையை உருவாக்க குழுவை நியமித்தார்.

இவர்களுடைய நோக்கமெல்லாம் இந்தியைப் புகுத்த வேண்டும். அந்தக் காலத்திலிருந்து இந்தி எதிர்ப்புக்காக போராடிய மாநிலம் தமிழ்நாடு. ஏன்... தமிழ்நாடு என்று பெயர்வைத்ததே திமுக ஆட்சியில்தான். அண்ணாமலை இன்னும் வரலாற்றையும் படிக்கவேண்டும். அரசியலையும் தெரிந்துகொள்ளவேண்டும்.

விவாதிக்கலாம் வாருங்கள். உண்மையிலேயே பாஜகவினருக்கு தமிழின் மீது அக்கறை கிடையாது. அவர்கள் ஜனநாயக மாண்பையே ஒழித்துவிட்டு ஒற்றை ஆட்சியை கொண்டுவர வேண்டுமென்ற நோக்கிலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற விளைவுதான் தேசிய கல்விக் கொள்கை என்பதை பாமர மக்களும் நன்கு அறிவார்கள்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE