சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் பட்டப்படிப்புக்கான தமிழ்ப் பாட விடைத்தாளை திருத்த தனியார் பொறியியல் கல்லூரிகளில் இருந்து இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் உடற்கல்வியியல் ஆசிரியர்கள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவலுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலம் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பொறியியல் பட்டப்படிப்புக்கான முதலாம் ஆண்டு தமிழ் மொழிப் பாடத் தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி நேற்று முன் தினம் மே 25ஆம் தேதி தொடங்கியுள்ளது. தமிழர் மரபு என்ற தமிழ்ப் பாட விடைத்தாளை திருத்த தனியார் பொறியியல் கல்லூரிகளில் இருந்து இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் உடற்கல்வியியல் ஆசிரியர்கள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக பேராசிரியர்கள் மூலம் கிடைத்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
தமிழ்மொழிப் பாட விடைத்தாள்களை பிற பாட ஆசிரியர்களைக் கொண்டு மதிப்பீடு செய்வதையும், அதை அண்ணா பல்கலைக்கழகம் கண்டுகொள்ளாமல் அனுமதிப்பதையும் விட அன்னைத் தமிழ் மொழியை இழிவுபடுத்த முடியாது.
» இரண்டாவது திருமணம் செய்தது ஏன்? - மனம் திறந்த ஆஷிஷ் வித்யார்த்தி
» திடீர் உடல்நலக்குறைவு - ‘தி கேரளா ஸ்டோரி’ இயக்குநர் சுதிப்டோ சென் மருத்துவமனையில் அனுமதி
பட்டப்படிப்பு வரை தமிழ் மொழிக் கட்டாயப் பாடமாக்கப்பட வேண்டும் என்று பாமக தொடர்ந்து எழுப்பி வந்த குரலின் பயனாக 2022-23ஆம் ஆண்டு முதல் பொறியியல் படிப்பில் முதலாமாண்டின் இரு பருவங்களிலும் தமிழ்மொழி பாடத்தாள் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதை செயல்படுத்துவதில் அண்ணா பல்கலைக்கழகம் தொடர்ந்து குளறுபடிகளை செய்து வருகிறது. தொடக்கத்தில் தமிழ்ப் பாடத்தை நடத்த தமிழாசிரியர்களை அமர்த்தாமல், தமிழ் தெரிந்த பொறியியல் ஆசிரியர்களைக் கொண்டே பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு நான் கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும் தற்காலிகமாக தமிழ் ஆசிரியர்களை அமர்த்த ஏற்பாடு செய்யப்பட்டது. பிற கல்லூரிகளில் தமிழாசிரியர்கள் அமர்த்தப்படவில்லை.
அடுத்ததாக, கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி நடத்தப்பட்ட தமிழர் மரபு என்ற தமிழ்மொழிப் பாடத் தேர்வை ஆங்கிலத்தில் எழுத மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதற்கு அண்ணா பல்கலைக்கழகமே அனுமதி அளித்து கல்லூரி முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி இருந்தது. அதை தமிழ்மொழி பாடத் தேர்வு நடத்தப்பட்ட நாளிலேயே நான் கடுமையாக கண்டித்ததுடன், ஆங்கிலத்தில் எழுதப்பட்ட தேர்வை ரத்து செய்து விட்டு, மறுதேர்வு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். ஆனால், மறுதேர்வு நடத்தாமல், பெரும்பான்மையான மாணவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட தமிழ்ப்பாடத் தேர்வை அறிவியல் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களைக் கொண்டு மதிப்பீடு செய்வது தான் அன்னைத் தமிழுக்கு செய்யும் மரியாதையா?
பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் அன்னைத்தமிழ் புறக்கணிக்கப்படுகிறது. பொறியியல் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் தமிழ்மொழியின் அடிப்படையையாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் தமிழ்மொழிப் பாடம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், தமிழ்மொழிப் பாடத்தை நடத்துவதற்கு ஆசிரியர்கள் இல்லை. தமிழ் பாடத்திற்கான தேர்வும் தமிழில் நடத்தப்படுவதில்லை. தமிழ்ப்பாடத் தேர்வின் விடைத்தாளும் தமிழாசிரியர்களைக் கொண்டு திருத்தப்படுவதில்லை என்றால், இது தான் தமிழை வளர்க்கும் முறையா? பொறியியல் படிப்பில் தமிழ் மொழிப்பாடம் அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கத்தையே இது சிதைத்து விடும். வரும் கல்வியாண்டிலாவது அனைத்து குறைகளையும் களைந்து, பொறியியல் படிப்புகளில் தமிழ்மொழிப் பாடத்தை அதற்குரிய மரியாதையுடன் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
36 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago