செந்தில்பாலாஜியின் தம்பி, ஒப்பந்ததாரர்கள் வீடு, அலுவலகம் உட்பட 40 இடங்களில் வருமான வரி சோதனை - முழு விவரம்

By செய்திப்பிரிவு

சென்னை/ கோவை/ கரூர்: அமைச்சர் செந்தில்பாலாஜி தம்பியின் வீடு, அலுவலகங்கள் மற்றும் டாஸ்மாக், மின்துறை ஒப்பந்ததாரர்கள், அவர்களது நண்பர்கள், உறவினர்களின் வீடு, அலுவலகம் உட்பட தமிழகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, திமுகவினர் வாக்குவாதம், ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதனால், சோதனையை அதிகாரிகள் பாதியில் கைவிட்டு,போலீஸில் புகார் கொடுத்தனர்.

அதிமுக ஆட்சியில், போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த விவகாரம், சமீபத்தில் நடந்த கள்ளச் சாராய உயிரிழப்புகள் காரணமாக, தமிழக மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சர் பதவியில் இருந்து செந்தில்பாலாஜியை நீக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி மற்றும் டாஸ்மாக், மின்துறை ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் வருமான வரித் துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள பிஷப் கார்டன் பகுதியில் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீடு, அவரது அலுவலகம் உள்ளிட்ட 4 இடங்களில் காலை முதல் சோதனை நடந்தது. கோவையில் கோல்டுவின்ஸ் பகுதியில் திமுகவை சேர்ந்த தொழிலதிபர் செந்தில் கார்த்திகேயன் வீடு, அலுவலகம், தொண்டாமுத்தூரில் செந்தில்பாலாஜியின் நண்பரான அரவிந்துக்கு சொந்தமான மதுபோதை சிகிச்சை மையம், ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள அவரது வீடு, புலியகுளம் - சவுரிபாளையம் சாலையில் உள்ள அவரது அலுவலகம், பொள்ளாச்சி கிணத்துக்கடவு அடுத்த பனப்பட்டி பகுதியில் உள்ள செந்தில்பாலாஜி உறவினர் சங்கர் ஆனந்தின் எம்.சாண்ட் ஆலை, ஆனைமலை அடுத்த காளியாபுரத்தில் செந்தில்பாலாஜியின் நெருங்கிய நண்பரான அரவிந்த் மோகன்ராஜின் பண்ணை வீடு, ஈரோட்டில் டாஸ்மாக் மதுபானங்களை குடோனுக்கு லாரி மூலம் கொண்டு வரும் ஒப்பந்ததாரர் சச்சிதானந்தத்தின் வீடு, அலுவலகம் ஆகிய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமாரின் வீட்டுக்கு வருமான வரிஅதிகாரிகள் சென்ற தகவல் கிடைத்ததும், மாநகராட்சி மேயர் கவிதா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் அங்கு குவிந்தனர். அடையாள அட்டையை காட்டுமாறு வருமான வரித் துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, அதிகாரிகள் தன்னை தாக்கியதாக கூறி திமுக பிரமுகர் குமார் திடீரென மயங்கி விழுந்தார். திமுகவினர் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். இதனால் திமுகவினர் கோபமடைந்து, வருமான வரி அதிகாரிகளின் கார் மீது கல்வீசி தாக்கினர்.

தொடர்ந்து சோதனை நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால், அங்கிருந்து புறப்பட்ட வருமான வரித் துறை அதிகாரிகள், நகர காவல் நிலையத்துக்கு சென்று தஞ்சமடைந்தனர். பின்னர், வருமான வரித் துறை அதிகாரிகள் காயத்ரி, சுனில்குமார், கல்லா சீனிவாசராவ், பங்கஜ்குமார் ஆகியோர் கரூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு சென்று, திமுகவினர் தங்களை தாக்கியதாக புகார் கொடுத்துவிட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர்.

இதேபோல, கரூர் ஆண்டாங்கோவில் பகுதியில் கல்குவாரி உரிமையாளர் தங்கவேல் வீட்டுக்கு சோதனையிட மற்றொரு குழுவினர் சென்றபோது, வீட்டின் கேட் பூட்டியிருந்ததால், சுற்றுச்சுவரில் ஏறிக்குறித்து உள்ளே சென்றுள்ளனர். அப்போது அங்குவந்த திமுகவினருக்கும், வருமான வரி அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த அதிகாரிகளும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு சென்று புகார் கொடுத்தனர்.

இந்த நிலையில், இந்த 2 இடங்களில் பிரச்சினை ஏற்பட்டதை தொடர்ந்து, ராயனூரில் உள்ள துணைமேயர் சரவணன் வீடு, கொங்கு மெஸ் மணி, அவரது உறவினர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் நடத்தி வந்த சோதனையை வருமான வரி அதிகாரிகள்பாதியில் கைவிட்டு, காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்தனர்.

அதன்பின், கரூர் மாவட்டம் காட்டுமுன்னூர்ஸ்ரீ பாலவிநாயகா ப்ளூ மெட்டல்ஸ், பவித்திரத்தில் உள்ள அவர்களுக்கு சொந்தமான ரெடிமிக்ஸ் நிறுவனம், காந்தி கிராமம் முல்லை நகரில் உள்ள ஒப்பந்ததாரர் எம்.சி.எஸ்.சங்கரின் அக்கவுன்டன்ட் வீடு, ஆண்டாங்கோவிலில் உள்ள தங்கராஜ் வீடு, ஏகேசி நகரில் உள்ள கொங்கு மெஸ் மணியின் நண்பர்வீடு என 5 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தினர்.

இதுபற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் கூறும்போது, ‘‘வருமான வரி சோதனைகுறித்து எங்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படவில்லை. வருமான வரித் துறையினரின் கார் சேதப்படுத்தப்பட்ட தகவல் தெரிந்ததும் போலீஸார் அங்கு பாதுகாப்புக்கு சென்றனர். சோதனைநடக்கும் இடங்களில் 150 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்’’ என்றார்.

வருமான வரித் துறையினரின் சோதனை பாதுகாப்புக்காக கோவையில் இருந்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் (சிஐஎஸ்எஃப்) 100 பேர் கரூர் வந்துள்ளனர்.

தமிழகத்தின் பல இடங்களிலும் வருமான வரி சோதனை நள்ளிரவு வரை நீடித்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்