வெல்ல ஆலைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு: 13 ஆலைகளுக்கு நோட்டீஸ்; 3,725 கிலோ சர்க்கரை பறிமுதல்

By செய்திப்பிரிவு

நாமக்கல்: ஜேடர்பாளையம் சுற்று வட்டாரத்தில் உள்ள வெல்ல ஆலைகளில் உணவுப் பாதுகாப்பு, வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கலப்படம் கண்டறியப் பட்ட 13 ஆலைகளுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர்.

பரமத்தி வேலூர் அருகே ஜேடர்பாளையம் அதன் சுற்று வட்டாரத்தில் ஏராளமான வெல்ல ஆலைகள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் வெல்லம், பிலிக்கல்பாளையம் வெல்ல மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு ஏல முறையில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் செயல்படும் வெல்ல ஆலைகளில் வெள்ளை சர்க்கரை மற்றும் வேதிப் பொருட்களை கலப்படம் செய்வதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உமா உத்தரவிட்டார்.

இதையடுத்து மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர், பரமத்தி வட்டாட்சியர் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் குழு, ஜேடர்பாளையம் பகுதியில் செயல்படும் வெல்ல உற்பத்தி ஆலைகளில் கடந்த இரு தினங்களாக ஆய்வு மேற்கொண்டனர்.

மொத்தம் 21 ஆலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், வெல்லம் தயாரிக்கும் இடம், பணியாளர் சுத்தம், சர்க்கரை, வேதிப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது சர்க்கரை மற்றும் வேதிப்பொருட்களை கொண்டு வெல்லம், நாட்டுச் சர்க்கரை தயாரித்த 13 ஆலைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும், 38,310 கிலோ வெல்லம், நாட்டுச்சர்க்கரை மற்றும் 3,725 கிலோ வெள்ளை சர்க்கரை, வேதிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தவிர, 13 உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஆய்வு முடிவில், உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின் கீழ் ஆலை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெல்லம் தயாரிக்கும் இடம், பணியாளர் சுத்தம், சர்க்கரை, வேதிப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE