நூலகத் துறையின் ‘தமிழ்நாடு - டாக்’ நிகழ்ச்சி: சென்னையில் இன்று நடைபெறுகிறது

By செய்திப்பிரிவு

சென்னை: மருத்துவர்கள் பிரகாஷ் ஆம்தே மற்றும் மந்தாகினி ஆம்தே ஆகியோர் பங்கேற்கும் ‘தமிழ்நாடு-டாக்’ நிகழ்ச்சி சென்னையில் இன்று (மே 26) நடைபெறுகிறது.

இதுகுறித்து பொது நூலக இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உலகளவில் புகழ்பெற்ற பல்வேறு துறை நிபுணர்கள், அறிவியல் ஆய்வாளர்கள் மற்றும் அறிஞர்களின் உரைகள் மிகச்சிறந்த தொழில்நுட்பம் மற்றும் அரங்க அமைப்புடன் ‘தமிழ்நாடு-டாக்’(Tamil Nadu Talk) எனும் பெயரில் நடத்தப்படும்.

இணைய வழியில் உலகெங்கும் உள்ள தமிழர்களைச் சென்றடையும் வகையில் இந்த திட்டம்ரூ.37.50 லட்சத்தில் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி தமிழ்நாடு-டாக் நிகழ்ச்சிகள் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக 4-வது தமிழ்நாடு-டாக் நிகழ்ச்சி அண்ணா நூலகத்தின் கலையரங்கில் வெள்ளிக்கிழமை (இன்று) மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் ரமோன் மகசேசே விருது பெற்ற பிரகாஷ் ஆம்தே மற்றும் மந்தாகினி ஆம்தே ஆகியோர் பங்கேற்று ‘Odyssey of Community Service: A Personal Reflection’ என்ற தலைப்பில் உரையாற்றி பார்வையாளர்களுடன் கலந்துரையாடவுள்ளனர்.

இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். விருப்பமுள்ளவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். மேலும் இந்த நிகழ்ச்சி அண்ணா நூலகத்தின் யூடியூப் தளத்திலும் (http://www.youtube.com/ACLChennai) நேரலையில் ஒளிபரப்பப்படும். மருத்துவர்களான பிரகாஷ் ஆம்தே மற்றும் மந்தாகினி ஆகிய இருவரும் மகாராஷ்டிராவின் ஹேமல்காசா கிராமத்தில் உள்ள மக்களின் நலனுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE