திரு.வி.க.நகரில் ரூ.93 லட்சத்தில் இறகுப்பந்து கூடம்: அமைச்சர் சேகர்பாபு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை திரு.வி.க.நகரில் ரூ.93 லட்சத்தில் அமைக்கப்படவுள்ள இறகுப்பந்து கூடத்துக்கான திட்டப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு நேற்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

சென்னை திரு.வி.க.நகர், புதியவாழைமா நகரில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில்,மேயர் நிதியின் கீழ் ரூ.93.30 லட்சத்தில் இறகுப்பந்து கூடம்மற்றும் பெரம்பூர் நெடுஞ்சாலையில் ரூ.16.61 லட்சத்தில் நவீன பேருந்து நிழற்குடை அமைக்க மாநகராட்சி சார்பில் திட்டமிடப்பட்டிருந்தது.

இதையொட்டி மங்களபுரம், கிருஷ்ணதாஸ் சாலையில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் நேற்று சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டு இதற்கான திட்டப் பணிகளை மேற்கொள்ள அடிக்கல் நாட்டினார்.

மேலும் மாமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ், மங்களபுரம், கிருஷ்ணதாஸ் சாலையில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளி வளாகத்தில் ரூ.35 லட்சத்தில் பல்நோக்கு கட்டிடம், பிரிஸ்லி நகரில் உள்ள பழுதடைந்த உடற்பயிற்சிக் கூடக் கட்டிடத்தை மூலதன நிதியின் கீழ் ரூ.20.55 லட்சத்தில் மேம்படுத்தும் பணியையும் அமைச்சர் சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் பிரியா, சட்டப்பேரவை உறுப்பினர் ப.சிவகுமார் என்ற தாயகம் கவி, மண்டலக் குழுத் தலைவர் சரிதா மகேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பூர் நெடுஞ்சாலையில் ரூ.16.61 லட்சத்தில் நவீன பேருந்து நிழற்குடை அமைக்கவும் அடிக்கல்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE