தீபாவளி மது விற்பனை சரிவு தொடருமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கும் மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்தும் சமூக ஆர்வலர் செந்தில் ஆறுமுகம் பதில் அளித்துள்ளார்.
கடந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையின் போது விற்பனையானதை விட, இந்த ஆண்டு தீபாவளியையொட்டி மது விற்பனை 20 சதவீதம் குறைந்துள்ளது. இதை எப்படி பார்க்கிறீர்கள்? தமிழகத்தில் மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு அதிகரித்திருப்பது என எடுத்துக்கொள்வதா? என்பது குறித்து மது ஒழிப்பு போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் சமூக ஆர்வலர்களில் ஒருவரான செந்தில் ஆறுமுகத்திடம் தி இந்து தமிழ் இணையதளம் சார்பில் கேள்வி எழுப்பினோம்.
கடந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையைவிட இந்த வருடம் மது விற்பனை வெகுவாகக் குறைந்துள்ளது. இதை மதுப் பிரியர்களுக்கு ஏற்பட்ட விழிப்புணர்வாகப் பார்க்கிறீர்களா? மக்கள் போராட்டத்தின் வெளிப்பாடு எனச் சொல்லலாமா?
கிடைப்பது, எளிதில் கிடைப்பது என இரண்டு வகை உண்டு. இந்த இரண்டு விஷயங்களையும் கட்டுப்படுத்தும் போது அதற்கான விளைவு இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது.
டாஸ்மாக் செயல்பாட்டில் இரண்டு விஷயங்கள் நடந்துள்ளன. ஒன்று விற்பனை நேரத்தைக் குறைத்துள்ளார்கள். மற்றொன்று கடைகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளன. சரியான இடத்தில் முழுமையாக மீண்டும் கடையைத் திறக்க அரசால் முடியவில்லை என்பதும் இந்த விற்பனை வீழ்ச்சிக்கு ஒரு காரணம். இவையெல்லாம் பெரிய வீச்சு அல்ல. பாதியாகக் குறைந்துவிட்டது. வெகுவாக விற்பனை சரிந்து விட்டது என்றெல்லாம் சொல்வது போல், விற்பனைச் சரிவில் மிகப்பெரிய மாற்றம் வரவேண்டும். ஓரளவு குறைந்துள்ளது, அவ்வளவுதான். விற்பனை கிட்டத்தட்ட அதே அளவில் தான் உள்ளது.
தமிழக அரசு இந்தப் பிரச்சினையை எப்படிப் பார்க்கும்?
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்திய அதே நேரத்தில், மற்றொரு அறிவிப்பாகத்தான் மதுபான வகைகளின் விலையையும் உயர்த்தியுள்ளனர்.
அப்படியென்றால் வருமானம் ஈட்டித்தரும் ஒரு விஷயமாகத்தான் மது விற்பனையை பார்க்கிறது அரசாங்கம். அரசை நடத்துவதற்கான முக்கியமான வருவாய் என்கிற பார்வை ஆபத்தானது.
தமிழக அரசு ’மது விற்பனை’ நிலையைத் தொடரும் என்று நினைக்கிறீர்களா?
அதிமுக தேர்தல் அறிக்கையில் பூரண மதுவிலக்கை படிப்படியாக கொண்டுவருவோம் என்று கூறியிருந்தது.
அதில் படிப்படியாக கடைகளைக் குறைப்பது, கடை விற்பனை நேரத்தைக் குறைப்பது என்பதை அமல்படுத்தினார்கள். இரண்டு முக்கியமான விஷயங்களைக் கடைபிடிக்கவில்லை.
ஒன்று மறுவாழ்வு மையங்கள் திறப்பது. அடுத்து பார்களை மூடுவது. இது சம்பந்தமாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
முதலில் 500 கடைகளை மூடியபோது நாங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டபோது, மூடப்பட்ட 500 கடைகளில் ஒரு கடை கூட பார் இருக்கும் கடை இல்லை என்பது சுவாரஸ்யமான, வேதனையான விஷயம்.
பார் மூடப்பட வேண்டும், பார் இருக்கும் கடைகளை மூடுவதுதான் முக்கியமான காரியம். பிரச்சினை உள்ள இடம், போராட்டம் நடத்திய இடம், சேல்ஸ் குறைவான இடம், கோர்ட் வழக்கு உள்ள இடம் என கவனமாக, அரசுக்கு ஆதாயம் பறிபோகாமல் உள்ள கடைகளை மட்டுமே மூடியுள்ளனர்.
படிப்படியான மதுவிலக்கில் முதல்படி என்னவாக இருக்க வேண்டும் என்றால், மது விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயை ஒதுக்கி வைத்துவிட்டு அரசாங்கம் நடத்த இந்த அரசு முன்வர வேண்டும். காந்தி கள்ளுக்கடை ஒழிப்பு போராட்டத்தில் கூறியது என்னவென்றால் கள்ளுக்கடையை ஒழிக்க வேண்டும் என்றால் மதுவால் வரும் வருமானம் அனைத்தையும் மறுவாழ்வுக்கும், அவர்களுக்கான விழிப்புணர்வு பிரச்சாரத்துக்கும் ஒதுக்க வேண்டும் என்றார்.
தமிழக அரசு அதைச் செய்கிறதா?
மதுவால் வரும் வருமானம் கிட்டத்தட்ட ரூ.30 ஆயிரம் கோடியை நெருங்கி வருகிறது. ரூ.25 ஆயிரம் கோடியைத் தாண்டிவிட்டது. ஆனால் மறு வாழ்வுக்காக ஒதுக்குவது வெறும் ரூ.5 கோடி மட்டுமே. அதிலும் கள்ளச்சாராயத்தை குடிக்காதீர்கள் எங்கள் சாராயத்தை குடியுங்கள் என்கிற அளவில்தான் இந்த அரசு செயல்படுகிறது.
அப்படியானால் இந்த ஆண்டு தீபாவளி மது விற்பனைக் குறைவை எப்படிப் பார்ப்பது?
ஒருவகையில், வரவேற்கத்தக்க அம்சம்தான். ஆனால் இது நிலையாக இருக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது. அரசாங்கம் எங்கே பணம் கிடைக்கும் என்கிற தாகத்தோடு உள்ளது. நேற்று முன் தினம் கோவைக்குச் சென்றிருந்தோம். அங்கு விவசாய நிலத்தில் புதிது புதிதாக மதுக்கடைகளைத் திறந்துள்ளது அரசு.
முன்பு குடியிருப்புப் பகுதியில் டாஸ்மாக் கடைகள் கூடாது என்றுதான் போராடினோம். தற்போது விவசாய நிலத்திலேயே கடைகளைத் திறக்க ஆரம்பித்து விட்டார்கள். அரசாங்கம் இந்த வருமானத்தை நம்பித்தான் இருக்கிறது. அதன் மன நிலை மாறவில்லை.
நெடுஞ்சாலைகளில் கடைகள் திறக்கக்கூடாது என்பது எந்த நிலையில் உள்ளது?
நெடுஞ்சாலைகளில் திறப்பது இல்லை, ஆனால் நகரத்துக்குள் அதிகம் வந்துவிட்டது. முறையான நடவடிக்கை இல்லாமலே புதுக்கடைகள் அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. எங்கெல்லாம் வாய்ப்பு உள்ளதோ அங்கெல்லாம் அதிக அளவில் மதுக்கடைகளைத் திறக்கிறார்கள்.
தற்போது எவ்வளவு எண்ணிக்கையில் டாஸ்மாக் கடைகள் உள்ளன?
முன்பு எத்தனை கடைகள் என்பது தெரியும். 6800 கடைகள் என்கிற விஷயம் பட்ஜெட்டில் தெளிவாக இருந்தது.ஆனால் இன்று எங்கெல்லாம் வாய்ப்பு இருக்கிறதோ அங்கெல்லாம் திறக்க ஆரம்பித்து விட்டார்கள். தற்போது டாஸ்மாக் கடை என்பது ஷேர்மார்க்கெட் போல் மாறி வருகிறது.
இன்று எத்தனை மணிக்கு எத்தனை கடை உள்ளது என்பது போல் மாறி வருகிறது. மாவட்ட ஆட்சியர்கள், வட்டாட்சியர்கள் இதை ஓயாத வேலையாக செய்து வருகின்றனர். இன்று இத்தனை கடை திறந்தோம் என வருங்காலத்தில் சாராயப் பட்டியல் வெளியிடுவார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. அரசின் வருமானத்தில் நான்கில் ஒரு பங்கு மது விற்பனை மூலம் வருவது, மிகவும் ஆபத்தான ஒன்று.
இவ்வாறு செந்தில் ஆறுமுகம் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
16 mins ago
தமிழகம்
38 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago