சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று ஜப்பான் சென்றடைந்தார்.
சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுடன் தமிழகத்துக்கு உள்ள பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தவும், சென்னையில் அடுத்த ஆண்டு நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்த நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
கடந்த 23-ம் தேதி சென்னையில் இருந்து சிங்கப்பூர் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று முன்தினம் 3 முக்கிய நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள், சிங்கப்பூர் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரனை சந்தித்து, வர்த்தக உறவுகள், முதலீடுகள் குறித்து பேசியதுடன், உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு வரும்படி அழைப்பு விடுத்தார்.
தொடர்ந்து, சிங்கப்பூர் உள் மற்றும் சட்டத் துறை அமைச்சர் கே.சண்முகத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று சந்தித்து, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.
இதற்கிடையில், இரண்டு நாள் சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்ட முதல்வர் ஸ்டாலின் நேற்று ஜப்பானின் ஒசாகாவுக்கு சென்றார். அவரை ஒசாகாவுக்கான இந்திய தூதர் நிகிலேஷ் கிரி வரவேற்றார். இந்தப் பகுதியில் இந்திய வம்சாவளியினர் அதிகம் வசிக்கின்றனர்.
ஒசாகாவில் ஜப்பான் வெளியுறவு வர்த்தக நிறுவனமான ஜெட்ரோவுடன் இணைந்து, அங்கு இன்று (மே 26) நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் பங்கேற்கிறார். மேலும், பல முக்கிய நிறுவனங்களின் அதிகாரிகளை சந்தித்து, தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுக்கிறார்.
தொடர்ந்து, ஒசாகா வாழ் இந்தியர்கள் அளிக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர் டோக்கியோ சென்று, ஜப்பான் அமைச்சர்கள் மற்றும் பல்வேறு தொழில் வர்த்தக நிறுவனங்களின் அதிகாரிகளை முதல்வர் ஸ்டாலின் சந்தித்துவிட்டு, வரும் 31-ம் தேதி தமிழகம் திரும்புகிறார்.