செங்கோலில் உள்ள நந்தி சிலை மத சின்னம் என்பதால் எதிர்க்கிறோம் - திருமாவளவன்

By செய்திப்பிரிவு

மதுரை : பாராளுமன்ற திறப்பின்போது, தமிழகத்தில் இருந்து வழங்கப்படும் செங்கோலிலுள்ள நந்தி சிலை மதச்சின்னமாக இருப்பதால் எதிர்க்கிறோம் என, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறினார்.

மதுரை பெருங்குடியிலுள்ள தனியார் ஓட்டலில் அவர் இன்று (மே 25)செய்தியாளர்களிடம் கூறியது; மக்களவை, மாநிலங்களவையின் தலைவராக இருப்பவர் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு. நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாக்கு இவரையும், குடியரசு துணைத் தலைவரும் புறக்கணிக்கப்படுவது ஜனநாயக மாண்புக்கு எதிரானது. ஜனநாயகத்தை கொச்சைபடுத்தும் செயல். மேலும், காங்கிரஸ் உள்ளிட்ட 18 கட்சிகளும் புறக்கணிக்கப் பட்டுள்ளது.

நாங்கள் மே 28 ம் தேதியை(திறப்பு விழா) கருப்புதினமாக அனுசரித்து, கருப்பு சட்டையணிந்து கருப்பு கொடி ஏற்றுவோம். ஆர்எஸ்எஸ் கட்சி சாவர்கர் பிறந்த தினத்தை கொண்டாடும் விதமாக மே 28 ல் திறக்கின்றனர். ஆந்திரா , சட்டீஸ்கர் தலைமை செயலகங்களை முதல்வர்கள் திறந்தனர். அதுபோல் புதிய பாராளுமன்றத்தை பிரதமர் திறப்பதில் தவறு இல்லை என நிர்மலா சீத்தாராமன் கூறுகிறார். தலைமை செயலகம் வேறு. சட்டமியற்றும் அவை வேறு. குடியரசு தலைவர் தான் திறக்கவேண்டும்.

செங்கோல் என்பது மதசார்பற்றது என்றாலும், அதிலுள்ள நந்தி சிலை மத சின்னமாக இருப்பதால் எதிர்க்கிறோம். மதசார்பற்ற கட்சிகள் அனைத்தும் பாஜவை எதிர்கின்றோம். மது விலக்கு கொள்கையை ஆதரிக்கிறோம். மாநிலங்கள் மட்டுமல்ல இந்தியா முழுமைக்கும் மதுவிலக்கை அமல்படுத்தவேண்டும். இதை வலியுறுத்தி ஜூன் 15ம் தேதிக்கு பின் தமிழகம் தழுவிய போராட்டம் விசிக சார்பில் நடக்கும். திமுக தேர்தல் அறிக்கையில் மது ஒழிப்பு பற்றி கூறியுள்ளது. அதனை செயல்படுத்த வேண்டும். மாவட்டம் தோறும் உளவியல் ஆலோசனை மையம் அமைக்கவேண்டும். தமிழகத்தில் படிப்படியாக மதுக்கடைகளை குறைக்க வேண்டும். கர்நாடாகவில் பாஜக தோல்விக்கு ஹிந்துகளே காரணம்.

அதிமுக மதுவிலக்கு கொள்கையை தெளிவுபடுத்த வேண்டும். மக்கள் பிரச்சினையில் அரசிற்கு எதிராக போராட வேண்டும் என்பது நோக்கமல்ல. சில நேரத்தில் அரசின் கொள்கைக்கு எதிராக செயல்படும் சூழல் உள்ளது. தற்போதைய நிலையில் காங்கிரஸ் - திமுக கூட்டணியில் விசிக தொடரும்" இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அருப்புக்கோட்டையில் பேசிய திருமாவளவன், "மே 28ம் தேதி தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் அனைவரும் கருப்பு சட்டை அணிகிறோம். கருப்பு கொடியை ஏந்துகிறோம். அந்த நாளை நாங்கள் துக்க நாளாக கடைபிடிக்கிறோம். மேலும், மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்தக் கோரி விரைவில் நாடு தழுவிய போராட்டத்தை நாங்கள் முன்னெடுக்க உள்ளோம். முழு மதுவிலக்கு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்திய அளவில் மதுவிலக்கை தேசிய கொள்கையாக அறிவிக்க வேண்டும்.

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் இந்த மதுவிலக்கு கொள்கையில் உடன்பாடு இருக்கிறது என்பதை கடந்த கால நடவடிக்கைகளில் நாம் அறிவோம். திமுக தேர்தல் அறிக்கையில் கூட படிப்படியாக நாங்கள் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று கூறி இருக்கிறார்கள். எனவே, முதல்வரின் கவனத்திற்கு இதை எடுத்துச் செல்வோம்" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE