சென்னை: சிங்கப்பூரில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் பல்வேறு துறைகளிலும் பெரிய அளவில் முதலீடு செய்ய சிங்கப்பூர் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். இந்த மாநாட்டில் முதல்வர் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
சென்னையில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கவும், தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கவும் சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
சிங்கப்பூரில் நேற்று நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் அவர் கலந்துகொண்டார். 250-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்ற இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
வரும் 2024 ஜனவரியில் பெரிய அளவில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த உள்ளோம். எங்கள்முக்கிய முதலீட்டாளர்களில் சிங்கப்பூரும் ஒன்று. தமிழகத்தில் 30 சிங்கப்பூர் நிறுவனங்கள் உள்ளன. தமிழகத்தை வரும் 2030-க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்குநிர்ணயித்து செயல்பட்டு வருகிறோம். எனவே, சிங்கப்பூர் நிறுவனங்கள் தமிழகத்தில் பெரிய அளவில் முதலீடு செய்ய முன்வரவேண்டும்.
» தருமபுரி | பைக் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து: கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
» ஸ்ரீவில்லிபுத்தூர் | கோயில் நிலம் குத்தகை விவகாரம் - செயல் அலுவலருக்கு போலீஸ் நோட்டீஸ்
கடந்த 2 ஆண்டுகளில் 226 திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் மூலம் ரூ.2.95 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. 4.12 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளில் ரூ.4,800 கோடி முதலீட்டில் 4 சிங்கப்பூர் நிறுவனங்கள் தமிழகத்தில் ஒப்பந்தம் செய்துள்ளன. இதன்மூலம் 6,200 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பின்டெக் நகரம் அமைப்பது போன்ற திட்டங்களை செயல்படுத்த, உங்களது ஆற்றலும், அனுபவமும் எங்களுக்கு மிகவும் தேவை. தொழில் பூங்காக்கள் மேம்பாடு, தொழில் நகரியங்கள், தொழில் பெருவழித் தடங்கள், துறைமுகங்களை மேம்படுத்துதல், நகர்ப்புற உள்கட்டமைப்பு, கழிவுநீர், திடக்கழிவு மேலாண்மை, கடல்நீரை நன்னீராக்கும் திட்டம், சுற்றுலா தொடர்பான திட்டங்களில் சிங்கப்பூரின் ஒத்துழைப்பு தமிழகத்துக்கு அவசியம்.
சிப்காட் மற்றும் சிங்கப்பூர் இந்தியா கூட்டுத் திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் தரமான உள்கட்டமைப்புக்கான கொள்கைகள் மற்றும் அளவுகோல்களை உருவாக்குதல், சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்துதல், கழிவுநீர் மேலாண்மை, மலிவு விலையில் இல்லங்கள், பசுமைக் கட்டிடங்கள் போன்றவற்றை மேம்படுத்தி, அதன்மூலம், தொழில் பூங்காக்களின் தரத்தை மேம்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும். வந்தாரை வாழவைத்த சிங்கப்பூர் எங்கள் தமிழகத்துக்கு வந்தும் வளப்படுத்த வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.
மாநாட்டில் சிங்கப்பூர் போக்குவரத்து, வர்த்தக அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் பேசும்போது, ‘‘தொழில் 4.0 நோக்கிய பயணத்தில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்க இரு அரசுகளும் இணைந்து செயல்படுகின்றன’’ என்றார்.
6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
> ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு, பல்கலைக்கழக ஒத்துழைப்பு போன்றவற்றுக்காக தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம் - சிங்கப்பூர் இந்திய தொழில்,வர்த்தக கூட்டமைப்பு ஒப்பந்தம்.
> பொருளாதார நடவடிக்கை, வளர்ச்சியில் ஒத்துழைப்பு அளிப்பது தொடர்பாக சிங்கப்பூர் இந்தியா கூட்டாண்மை அலுவலகம் (சிஐபிஓ) - சிப்காட் ஒப்பந்தம்.
> தொழிற்கல்வி, திறன் மேம்பாடு, புத்தாக்க பொருளாதார செயல்பாடுகளுக்காக சிஐபிஓ - தமிழக பேம்டிஎன் (FameTN) மற்றும் டான்சிம் ஒப்பந்தம்.
> ரூ.312 கோடி முதலீட்டுடன், 700 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் மின்னணு பாகங்கள் தயாரிக்க தொழில் வழிகாட்டி நிறுவனம் - சிங்கப்பூரின் ஹை-பி இன்டர்நேஷனல் நிறுவனம் ஒப்பந்தம்.
> பாடத்திட்டம், பாட மேம்பாட்டுக்காக தொழில் வழிகாட்டி நிறுவனம் - சிங்கப்பூர் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழகம் (எஸ்யுடிடி) புரிந்துணர்வு ஒப்பந்தம்.
> தொழில்நுட்பம், தொழிற்கல்வி பயிற்சி துறையில் நீண்டகால கூட்டாண்மைக்காக தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் - சிங்கப்பூரின் ஐடிஇ கல்வி சேவை நிறுவனம் ஒப்பந்தம் ஆகிய 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago