சிங்கப்பூரில் பிரபல நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கவும், தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கவும், பொருளாதார, வர்த்தக உறவுகளை மேம்படுத்தவும் சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். சென்னையில் இருந்து புறப்பட்டு நேற்று முன்தினம் சிங்கப்பூர் சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், சிங்கப்பூரில் பிரபலமாக விளங்கும் 3 நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை (சிஇஓ) நேற்று சந்தித்தார்.

முதலில், டமாசெக் சிஇஓ தில்ஹான் பிள்ளை சந்திரசேகராவை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார். அப்போது அவர், “புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் தெற்காசிய நாடுகளிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தமிழகத்தில் ஏற்கெனவே உள்ள காற்றாலைகளை வலுப்படுத்த வேண்டும். புதிய கடல் சார்ந்த காற்றாலைகளை நிறுவ வேண்டும். தமிழகத்தில் உள்ள புத்தாக்க நிறுவனங்கள், உணவு பதப்படுத்தும் தொழிலில் முதலீடு செய்ய வேண்டும். ‘பின்டெக் சிட்டி’ என்ற நிதி நிறுவனங்களுக்கான கட்டமைப்பிலும் முதலீடு செய்ய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, செம்கார்ப் நிறுவன சிஇஓ கிம்யின் வாங்க்கை ஸ்டாலின் சந்தித்தார். “தமிழகத்தில் எரிசக்தி துறையுடன் இணைந்து செம்கார்ப் நிறுவனம் பணியாற்ற வேண்டும். நீர் மின்சாரத்தின் ‘Pumped Hydro Storage’ திட்டங்களுக்கான வழிமுறைகளை மத்திய அரசு தற்போது எளிமையாக்கி உள்ளதால், பொது - தனியார் பங்களிப்பில் தமிழக அரசுடன் செம்ப்கார்ப் நிறுவனம் இணைந்து இத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்” என்றார்.

பின்னர், கேப்பிட்டாலேண்ட் நிறுவனத்தின் சிஇஓ சஞ்சீவ் தாஸ் குப்தாவை ஸ்டாலின் சந்தித்தார். “உலகின் சிறந்த தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து சிங்கப்பூரில் கேப்பிட்டாலேண்ட் நிறுவனம் வடிவமைத்துள்ள ‘சிங்கப்பூர் சயின்ஸ் பார்க்’ போன்ற பல்வேறு வகையான ஆராய்ச்சி, மேம்பாடு கட்டமைப்புகளை உருவாக்குவதில் தமிழக அரசு ஆர்வமாக உள்ளது. எனவே, அதற்கு தொழில்நுட்ப பங்களிப்பு, முதலீடுகளை அளிக்க வேண்டும்” என்று ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

தமிழகத்தில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளதாகவும், விரைவில் அதற்கான முன்னெடுப்புகளை செய்வதாகவும் முதல்வரிடம் அந்த நிறுவனங்களின் சிஇஓ.கள் உறுதியளித்தனர். தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, தலைமைச் செயலர் இறையன்பு, தொழில் துறை செயலர் ச.கிருஷ்ணன், சிங்கப்பூருக்கான இந்திய தூதர் பெரியசாமி குமரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அமைச்சருடன் சந்திப்பு: இதையடுத்து, சிங்கப்பூர் போக்குவரத்து, வர்த்தகத் துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரனை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார். அப்போது தமிழகம் உடனான பொருளாதார, வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்தும், தொழில் முதலீடு குறித்தும் பேசினார். உலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.

வழக்கமான முதலீடுகள் தவிர,பசுமை பொருளாதாரம், டிஜிட்டல்பொருளாதாரம் போன்ற துறைகளில் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பு, செமிகண்டக்டர், எலெக்ட்ரானிக் உதிரிபாகங்கள் தயாரிப்புக்கான சாத்தியக்கூறுகள் குறித்து முதல்வருடன் அமைச்சர் ஈஸ்வரன் விவாதித்தார்.

சிங்கப்பூரில் வரும் அக்டோபரில் நடக்க உள்ள பின்டெக் மாநாட்டுக்கு தமிழக அரசின் குழுவை அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். தமிழக வளர்ச்சிக்காக பல்வேறு புதிய திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதற்காக முதல்வருக்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE