சி.பா.ஆதித்தனார் 42-வது நினைவு நாள்: தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை

By செய்திப்பிரிவு

சென்னை: தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனார் 42-வது நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தினத்தந்தி நாளிதழ் நிறுவனர் சி.பா.ஆதித்தனாரின் 42-வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது உருவச் சிலைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள், வணிகர்கள், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நாடார் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சி.பா.ஆதித்தனார் சிலைக்கு தினத்தந்தி குழும தலைவர் சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன், தினத்தந்தி குழும இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன், மாலை முரசு நாளிதழ், தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திமுக சார்பில் சிம்லா முத்துச்சோழன், அதிமுக சார்பில் அமைப்புச் செயலர் பாலகங்கா, ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த ஜே.சி.டி.பிரபாகர், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜக சார்பில் கரு. நாகராஜன், மதிமுக சார்பில் நன்மாறன், சமத்துவ மக்கள் கழக நிறுவனர் எர்ணாவூர் நாராயணன், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், தொழிலதிபர் வி.ஜி.சந்தோஷம் உள்ளிட்டோர் சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

சி.பா.ஆதித்தனார் நினைவு தினத்தையொட்டி அவருக்கு கட்சித் தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். “இதழியல் உலகின் புரட்சியாளர்” என அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான கே.பழனிசாமியும், “தமிழ் இதழியல் உலகில் நீங்கா இடம்பிடித்த முடிசூடா மன்னர் சி.பா.ஆதித்தனார்” என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனும், “அன்னைத் தமிழுக்கு தொண்டாற்ற சி.பா.ஆதித்தனார் நினைவு நாளில் உறுதி ஏற்போம்” என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும், “சி.பா.ஆதித்தனாரின் சமூகப் பணிகளை போற்றுவதுடன், அவற்றை நாமும் தொடர உறுதியேற்போம்” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் புகழாரம் சூட்டியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE