எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கை நவம்பர் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் கே.பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றதையடுத்து தினகரன் ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் 18 பேர் கடந்த செப்டம்பர் 18-ம் தேதி தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த தகுதி நீக்கம் தொடர்பான உத்தரவு மறுநாளே அரசிதழிலும் வெளியிடப்பட்டதால் எந்நேரமும் இந்த தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படலாம் என்ற நிலை உருவானது.
இந்நிலையில், தகுதி நீக்கத்தை எதிர்த்து வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்ளிட்ட 18 எம்எல்ஏக்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். இதில் பேரவைத் தலைவர் ப.தனபால், அரசு கொறடா எஸ்.ராஜேந்திரன், முதல்வர் கே.பழனிசாமி, சட்டப்பேரவைச் செயலாளர் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டனர்.
இதேபோல சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிடக் கோரி எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மனு தாக்கல் செய்தார். இந்த 2 வழக்குகளும் ஏற்கெனவே கடந்த மாதம் நீதிபதி எம்.துரைசாமி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவோ, 18 தொகுதிகளையும் காலியாக அறிவித்து தேர்தலை அறிவிக்கவோ கூடாது என தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த இரு வழக்குகளும் உயர் நீதிமன்றத்தில் நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்பு அக்டோபர் 4-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த விசாரணையின்போது மு.க.ஸ்டாலின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அமரேந்தர் சரண், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, பேரவைத் தலைவர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், அரசு கொறடா சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, முதல்வர் சார்பில் மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன், ஆளுநர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திரிவேதி ஆகியோர் ஆஜராகினர்.
அனைத்து தரப்பினரின் வாதங்களைக் கேட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை அக்டோபர் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இந்நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன் வாதிட்டார். அவர் வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.
டிடிவி தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, ''எங்களுடைய வாய்மொழி வாதங்களை முதலில் முடித்துக் கொள்கிறோம். அடுத்ததாக ஆவணங்களை தாக்கல் செய்கிறோம்'' என்று கூறினார்.
இரு தரப்பிலும் முழுமையான ஆவணங்கள் செய்தால் மட்டுமே வழக்கை விசாரிக்க முடியும் என்று கூறிய நீதிபதி, அக்டோபர் 23-க்குள் அனைத்து தரப்பிலும் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று கூறி, விசாரணையை நவம்பர் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதையடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ தொகுதிகளில் தேர்தல் அறிவிப்புக்கான தடை நவம்பர் 2 வரை தொடர்கிறது. பெரும்பான்மையை நிரூபிக்க விதிக்கப்பட்ட தடையும் தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
32 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago