சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூவுக்கு மன்னார்குடியில் நினைவுச் சின்னம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு 

By செய்திப்பிரிவு

சிங்கப்பூர்: "லீ குவான் யூவுக்கு தமிழ்நாட்டில் நினைவுச் சின்னம் எழுப்ப முடிவு செய்து இருக்கிறோம். இது தமிழ்நாட்டில் மன்னார்குடியில் அமைய இருக்கிறது. சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்களில் பெரும்பகுதியினர் மன்னார்குடி, பட்டுக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்தவர்கள், எனவே, லீ குவான் யூ பெயரால் நூலகமும் சிலையும் மன்னார்குடியில் அமையும்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், "தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (24.05.2023) சிங்கப்பூரில், சிங்கப்பூர் தமிழ்ச்சங்களுடன் இணைந்து நடைபெற்ற தமிழ் கலை பண்பாட்டு நிகழ்ச்சியில், “வேர்களைத் தேடி” என்ற அயலகத் தமிழ் இளைஞர்களுக்கான திட்டத்தை தொடங்கி வைத்தார்.“வேர்களைத் தேடி” என்று புலம்பெயர்ந்து வாழும் இளைஞர்களை தாய்த் தமிழ்நாட்டின் மரபின் வேர்களோடு உள்ள தொடர்பை புதுப்பிக்கும் வண்ணமும், தமிழ் கலை பண்பாடு மற்றும் கலாச்சாரத்தினை அயலகத் தமிழர்களிடையே பரிமாற்றம் செய்யும் வகையிலும், ஆண்டுதோறும் 200 இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து பண்டைய தமிழர்களின் கட்டடம்/சிற்பக்கலை, நீர் மேலாண்மை, ஆடைகள் மற்றும் ஆபரணங்கள், கலை இலக்கிய பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள், அறிஞர்கள் மற்றும் சான்றோர்களுடன் கலந்துரையாடல் என்ற கலாச்சார பரிமாற்ற சுற்றுலாத் திட்டத்தினை தமிழக முதல்வர் தொடங்கி வைத்து, இத்திட்டத்திற்காக சிங்கப்பூரில் தெரிவு செய்யப்பட்ட 10 இளைஞர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார்.

பின்னர் இந்நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: "தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறி வருகிறது. ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற உன்னதமான திராவிடக் கோட்பாடு அடிப்படையிலான ஆட்சியை நடத்தி வருகிறோம். 2030 நிதியாண்டிற்குள், 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக தமிழ்நாட்டை மாற்றுவதற்கான ஒரு லட்சிய இலக்கினை அரசு நிர்ணயித்துள்ளது. எனவேதான் பல்வேறு தொழில்துறை முதலீட்டு மாநாடுகளை நடத்தியுள்ளோம். அடுத்த ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு வரும் போது அதில் சிங்கப்பூர் முதலீட்டாளர்களும் அதிகமாக இடம்பெற வேண்டும் என்று விரும்புகிறேன்.

அடுத்து, சிங்கப்பூரின் தந்தை என்று போற்றப்படும் லீ குவான் யூவால்தான் தமிழர்களும் தமிழும் இங்கு உயர்வை அடைந்தது. நம்முடைய பேரறிஞர் அண்ணாவின் பேச்சால் ஈர்க்கப்பட்டவர் லீ குவான் யூ. சிங்கப்பூரில் அண்ணாவின் உரையைக் கேட்ட லீ குவான் யூ, தனது மூத்த சகோதரர் என்று பாசத்தோடு குறிப்பிட்டார். அதுமட்டுமல்ல, தனது அலுவலகத்துக்கு அண்ணாவை அழைத்து விருந்து கொடுத்தார். அதனால்தான் லீ குவான் யூ இறந்தபோது சிங்கப்பூரின் நாயகன் என்று போற்றினார் கருணாநிதி.

ஆகவே ஒரு மகிழ்ச்சியான செய்தியை இந்த நேரத்தில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். லீ குவான் யூவுக்கு தமிழ்நாட்டில் நினைவுச் சின்னம் எழுப்ப நாங்கள் முடிவு செய்து இருக்கிறோம். இது தமிழ்நாட்டில் மன்னார்குடியில் அமைய இருக்கிறது. சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்களில் பெரும்பகுதியினர் மன்னார்குடி, பட்டுக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்தவர்கள். அங்குள்ள பரவாக்கோட்டை, கூப்பாச்சிக்கோட்டை, திருமக்கோட்டை, உள்ளிக்கோட்டை, மேலத்திருப்பாலக்குடி, கீழத்திருப்பாலக்குடி, ஆலங்கோட்டை நெடுவாக்கோட்டை, மேலவாசல் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் சிங்கப்பூருடன் தொடர்பு உண்டு என்பதை நான் நன்றாக அறிவேன். இந்தக் கிராமங்களில் இருந்து வந்தவர்கள் தான் அதிகம். எனவே, லீ குவான் யூ பெயரால் நூலகமும் சிலையும் மன்னார்குடியில் அமையும் என்பதை மகிழ்ச்சியுடன் நான் மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று முதல்வர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் “மொழி சார்ந்த முயற்சிகள்“ என்ற தலைப்பில் சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்ட அமைச்சர் கா.சண்முகம் கருத்துரையாற்றினர், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு, “சுற்றுலா மற்றும் பண்பாட்டு வாய்ப்புகள்” தொடர்பாக உரையாற்றினார். நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் இரா.ரவீந்திரன் வரவேற்புரை ஆற்றினார். முன்னதாக தமிழக முதல்வருக்கு பாரம்பரிய நடனம் மற்றும் நாதஸ்வர இசையுடன் கூடிய வரவேற்பு அளிக்கப்பட்டது. அத்துடன் இந்திய சிங்கப்பூர் கலைஞர்களின் ஆடல் பாடல் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

17 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்