அம்மா உணவகத்திற்கு ரூ.2 கோடி நிலுவை வைத்துள்ள கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம்

By கண்ணன் ஜீவானந்தம்

சென்னை: சென்னை அம்மா உணவகத்திற்கு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் 2 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் 402 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அம்மா உணவகங்களில் கட்டிடத் தொழிலாளர்களுக்கு இலவச உணவுகள் வழங்கப்படுகிறது. அவர்கள், கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தின் அடையாள அட்டையை காண்பித்து, இலவசமாக மூன்று வேலை உணவை உட்கொள்ள முடியும்.

அதற்கான நிதியை, கட்டுமான தொழிலாளர் நல வாரியம், சென்னை மாநகராட்சிக்கு வழங்க வேண்டும். ஆனால், இரண்டு ஆண்டுகளாக, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உணவருந்தியுள்ள நிலையில், 2 கோடி ரூபாய் வரை, கட்டுமான தொழிலாளர் நல வாரியம் சென்னை மாநகராட்சிக்கு வழங்க வேண்டியுள்ளது.

இதுகுறித்து, பலமுறை கடிதம், நேரில் வலியுறுத்தியும், மாநகராட்சிக்கான நிதியை அவர்கள் வழங்கவில்லை என, மாநகராட்சி அதிகாரிகள் குற்றச்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,"மாநகராட்சியில் செயல்படும் அம்மா உணவகங்கள் ஏற்கனவே நஷ்டத்தில் செயல்பட்டு வருகின்றன. இதனால், நிதிசுமை அதிகரித்துள்ளது. அதிமுக ஆட்சி மற்றும் திமுக ஆட்சியிலும் சரி அம்மா உணவகத்திற்கான நிதியை வழங்கும்படி கோரிக்கை வைத்து வருகிறோம்.

ஆனால், அவர்கள் நிதி வழங்காததால், தொடர்ந்து மாநகராட்சி நிதியிலேயே செயல்பட்டு வருகிறது. இதன் வாயிலாக ஆண்டுக்கு ரூ.120 கோடி நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. தற்போது, தொழிலாளர் நல வாரியம் தர வேண்டிய 2 கோடி ரூபாயும் தர மறுக்கிறது. இதுகுறித்து பலமுறை கடிதம் எழுதியும் பதிலில்லை."இவ்வாறு அவர்கள் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE