சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட 4 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட 4 கூடுதல் நீதிபதிகளுக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா நேற்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை பதிவாளராக பணிபுரிந்து கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிபதியாக பணியாற்றிய ஆர்.சக்திவேல், சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பி.தனபால், சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமைப் பதிவாளராக பணியாற்றி, சென்னை பெருநகர தொழிலாளர் நல நீதிமன்றத்தில் முதன்மை நீதிபதியாக பணியாற்றிய சி.குமரப்பன், மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலராக பணியாற்றி, கோவை மாவட்டமுதன்மை நீதிபதியாக பணியாற்றிய கே.ராஜசேகர் ஆகிய 4 பேரையும் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார்.

அதன்படி புதிய நீதிபதிகள் பதவியேற்பு நிகழ்ச்சி உயர் நீதிமன்ற கலையரங்கில் நேற்று நடைபெற்றது. புதிய நீதிபதிகளுக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முன்னதாக இந்நிகழ்வில் அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் வரவேற்றார். தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் மற்றும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் புதிய நீதிபதிகளை வாழ்த்திப் பேசினர். பின்னர் புதிய நீதிபதிகள் ஏற்புரை வழங்கினர். இவர்களுடன் சேர்த்து பணியில் உள்ள மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது. இதில் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா இன்றுடன் பணி ஓய்வு பெறுவதால் இந்த எண்ணிக்கை 64 ஆக குறைந்துள்ளது.

நீதிபதி ஆர்.சக்திவேல்: கரூர் மாவட்டம் வாங்கலைச் சேர்ந்த இவரது பெற்றோர் ராமசாமி - வேப்பாயி. 1973 ஜூலை 21-ம் தேதி பிறந்த இவர் அங்குள்ள அரசு பள்ளியில் பள்ளிப் படிப்பையும், திருச்சி அரசு சட்டக் கல்லூரியில் கடந்த 1997-ம் ஆண்டு சட்டப் படிப்பையும் முடித்தார். 1998-ம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்துள்ளார். 2011-ம் ஆண்டு நேரடி போட்டித் தேர்வின் மூலமாக வெற்றிபெற்று மாவட்ட நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். பல்வேறு மாவட்டங்களில் நீதிபதியாக பணியாற்றிய ஆர்.சக்திவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமைப் பதிவாளராகவும் பதவி வகித்துள்ளார்.

நீதிபதி பி.தனபால்: கரூர் மாவட்டம், ஜல்லிவடநாயக்கன் புதூரைச் சேர்ந்த இவரது பெற்றோர் டி.பப்புசாமி-பழனியம்மாள். 1974 மார்ச் 5-ம் தேதி பிறந்த இவர், அப்பகுதியில் உள்ள பஞ்சாயத்து யூனியன் மற்றும் நகராட்சி பள்ளிகளில் பள்ளிப்படிப்பை முடித்தவர், கரூர் அரசு கல்லூரியில் பிஎஸ்சி பட்டப்படிப்பையும், திருச்சி அரசு சட்டக்கல்லூரியில் 1998-ம் ஆண்டு சட்டப்படிப்பையும் முடித்துள்ளார். 1998-ம் ஆண்டு வழக்கறிஞராக பார் கவுன்சிலில் பதிவு செய்து, 2011-ம் ஆண்டு போட்டித் தேர்வின் மூலமாக மாவட்ட நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமைப் பதிவாளராக பணியாற்றி வந்தார்.

நீதிபதி சி.குமரப்பன்: சிவகங்கை மாவட்டம், பிரான்மலையைச் சேர்ந்த இவரது பெற்றோர் ஏ.டி.சின்னச்சாமி - சி.திலகம். 1972-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி பிறந்த நீதிபதி சி.குமரப்பன், கோவை கே.கே.கிருஷ்ணசாமி நாயுடு நினைவு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். கோவை அரசு கல்லூரியில் பி.எஸ்சி பட்டப்படிப்பையும், கோவை அரசு சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பையும் முடித்துள்ளார். 1996-ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்த இவரும், 2011-ம் ஆண்டு நடந்த நேரடி போட்டித் தேர்வில் வெற்றி பெற்று மாவட்ட நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமைப் பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

நீதிபதி கே.ராஜசேகர்: சென்னையைச் சேர்ந்த நீதிபதி கே.ராஜசேகரின் பெற்றோர் ஆர்.கந்தசாமி - லட்சுமிக்குட்டி. பள்ளிப்படிப்பை மயிலாப்பூர் சாந்தோம் பள்ளியிலும், பி.காம் படிப்பை விவேகானந்தா கல்லூரியிலும், சட்டப்படிப்பை சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியிலும் படித்தார். 1998-ம் ஆண்டு வழக்கறிஞராக பார்கவுன்சிலில் பதிவு செய்த இவர், 2011-ம் ஆண்டு நேரடி போட்டித் தேர்வின் மூலமாக மாவட்ட நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றினார். மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலராக பணி யாற்றியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்