ராஜபாளையம் அருகே கனமழையால் நெற்பயிர்கள் பாதிப்பு

By அ.கோபால கிருஷ்ணன்

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே சேத்தூர் பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக நெற்பயிர்கள் மண்ணில் சாய்ந்து பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

ராஜபாளையம் அருகே சோலைசேரி கிராமத்தில் உள்ள அரியநேரி கண்மாய் மூலம் சுமார் 250-க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இப்பகுதியில் தற்போது இரண்டாம் பருவ நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், ராஜபாளையம் சுற்று வட்டார பகுதியில் நேற்று இரவு இடி மின்னலுடன் கனமழை பெய்தது.

இதனால் அரியநேரி கண்மாயில் இரண்டாம் போக நெல் சாகுபடியில் நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த 10 ஏக்கருக்கு மேற்பட்ட நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து நீரில் மூழ்கியது. இதனால், நெல் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் கவலையில் உள்ளனர். தற்போது வயலில் தேங்கிய மழை நீரை வெளியேற்றும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ''நெல் கதிர்கள் விளைந்து விட்டதால், வயல் காய வேண்டும் என்பதால் தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்தி விட்டோம். இந்நிலையில் நேற்று இரவு பெய்த மழை காரணமாக நெல் பயிர்கள் வயலில் சாய்ந்து நீரில் மூழ்கி விட்டது. இதனால் நெல் கதிர்கள் முளைத்து விடும் சூழல் உள்ளது'' என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE