மானம்பாடி நாகநாதசுவாமி கோயிலின் திருப்பணிகளை தொடங்க வலியுறுத்தி மே 28-ல் உண்ணாவிரதம்: திருவடிக்குடில் சுவாமிகள்

By சி.எஸ். ஆறுமுகம்

தஞ்சாவூர்: திருவிடைமருதூர் வட்டம், மானம்பாடி நாகநாதசுவாமி கோயிலின் திருப்பணிகளைத் தொடங்க வலியுறுத்தி 28-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப்படும் என ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்ட நிறுவனர் திருவடிக்குடில் சுவாமிகள், அறநிலையத் துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில், “திருவிடைமருதூர் வட்டம், மானம்பாடியிலுள்ள சௌந்தரநாயகி அம்பாள் சமேத நாகநாதசுவாமி கோயில்,சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாகும். இங்கு சோழர் காலத்து கட்டுமானம் மற்றும் சிற்பங்களுடன், மிகவும் அரிதான ராஜேந்திர சோழனின் புடைப்புச் சிற்பமும், "தமிழ்க்கூத்து" என்கின்ற பழமையான நாடகக் கலைக்கான ஆதாரமான ஒரே கல்வெட்டு உள்ளது. அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள இந்த கோயில் பந்தநல்லூர், பசுபதீஸ்வரர் கோயிலின் இணைக் கோயிலாகும்.

இக்கோயிலில் கடந்த 2014-ம் ஆண்டு அறநிலையத் துறை மூலம் நிதி ஒதுக்கீடு செய்து, திருப்பணி வேலைகள் தொடங்கப்பட்டது. மேலும், பழமை மாறாமல் கட்டுமானம் மேற்கொள்ள, அங்கு சிதிலமடைந்திருந்து கிடந்த கற்களுக்கு குறிப்பு எழுதப்பட்டு, அங்குள்ள கோயிலை தரைமட்டம் வரை பிரித்தெடுக்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் கடந்த 10 ஆண்டுகளாக திருப்பணிகள் மேற்கொள்ளப்படாமல் தடைப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, திருப்பணி தொடங்க பலமுறை அறநிலையத் துறை அதிகாரிகளிடமும், சுவரொட்டிகள் மற்றும் போராட்டங்களையும் முன்னெடுத்தும், எந்த வித முன்னேற்றம் இல்லாமல் உள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, இக்கோயில் பாதுகாக்கப்பட்ட சின்னங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டதால் எந்தத் துறையின் மூலம் திருப்பணிகளை மேற்கொள்வது என்ற நிர்வாக ரீதியிலான சிக்கல் எழுந்துள்ளது எனத் தெரிவிக்கின்றனர்.

இதனால், இக்கோயிலின் கட்டுமானத்திற்கான கற்கள் உறுதித்தன்மையை இழக்கும் அபாயமும், கல்வெட்டு ஆவணங்கள் சிதிலமடையும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. மேலும், பக்தர்களின் வழிபாட்டு உரிமையும் பாதிக்கப்பட்டுள்ளதால், இனியும் தாமதித்தால் வரலாற்று ரீதியாக பேரிழப்பு ஏற்படும்.

எனவே, இக்கோயிலில் திருப்பணியைத் தொடங்கி, விரைவில் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, வரும் 28-ம் தேதி காலை முதல் மாலை வரை சிவனடியார்கள், பக்தர்கள், கிராம மக்கள் உள்ளிட்டோர் கோயில் முன்பு திரண்டு தேவாரம், திருவாசகம் பதிகம் பாடியபடி உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE