ஆளுநர் தமிழிசை புதுச்சேரியில் இருந்து வெளியேறக் கோரி ராஜ்நிவாஸை முற்றுகையிட முயன்றோர் கைதாகி விடுவிப்பு

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: துணைநிலை ஆளுநர் தமிழிசையை புதுச்சேரியிலிருந்து வெளியேறக் கோரி ராஜ்நிவாஸை முற்றுகையிட முயன்றோர் கைதாகி விடுவிக்கப்பட்டனர்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு டெல்லிக்கு மட்டுமே பொருந்தும், புதுச்சேரிக்கு பொருந்தாது என துணைநிலை ஆளுநர் தமிழிசை கருத்து தெரிவித்திருந்தார். இதைக் கண்டித்தும், புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் தலையிடும் ஆளுநர் தமிழிசை புதுச்சேரியை விட்டு வெளியேற வேண்டும் என வலியுறுத்தியும் ஆளுநர் மாளிகையான ராஜ்நிவாஸை முற்றுகையிடும் போராட்டம் இன்று நடந்தது.

இதற்காக செஞ்சி சாலையில் சமூகநல அமைப்பினர் ஒன்று திரண்டனர். திராவிடர் விடுதலை கழகம் லோகு அய்யப்பன் தலைமை வகித்தார். திராவிடர் கழகம் சிவவீரமணி, மீனவர் விடுதலை வேங்கைகள் மங்கையர் செல்வன், மக்கள் வாழ்வுரிமை இயக்கம் ஜெகநாதன், தந்தை பெரியார் திராவிடர் கழகம் வீரமோகன், தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ், மக்கள் உரிமை கூட்டமைப்பு சுகுமாரன், தமிழர் களம் அழகர், தமிழக வாழ்வுரிமை கட்சி ஸ்ரீதர் உட்பட பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் ஊர்வலமாக ராஜ் நிவாஸ் நோக்கி வந்தனர்.

போலீஸார் மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர். முற்றுகையிட வந்தோரை பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் அருகே போலீஸார் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்தினர். அங்கு கோரிக்கைகளை வலியறுத்தி கோஷம் எழுப்பினர். பின்னர் தடுப்புகளை மீறி செல்ல முயன்றதால் போலீஸார் அவர்களை கைது செய்தனர். ஒரு பெண் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

போராட்டத்தில் பங்கேற்றோர் கூறுகையில், "மக்களால் தேர்வான அரசுக்குக்கு அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக துணைநிலை ஆளுநர் தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் தனக்குதான் அதிகாரம் உள்ளதாக கருதி அமைச்சரவைக்கே தெரியாமல் அனைத்து அரசு நிர்வாகத்திலும் நேரடியாகத் தலையிடுகிறார். அதனால் அவர் புதுச்சேரியிலிருந்து வெளியேறக் கோரி போராட்டம் நடத்தினோம்" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE