தொழில் முதலீடு ஈர்ப்பு என்ற பெயரில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா: முதல்வரின் பயணம் குறித்து இபிஎஸ் விமர்சனம்

By செய்திப்பிரிவு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின், தொழில் துறைக்கு முதலீடுகளை ஈர்த்தல் என்ற பெயரில் இன்பச் சுற்றுலா மேற்கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அதிமுக அரசு கடந்த 10 ஆண்டுகளாக தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் விதமாகவும், தொழில் துறையின் முன்னேற்றத்திற்காகவும் ஜெயலலிதா 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை நடத்தி 2.42 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும்; சிறு, குறு மற்றும் நடுத்தரத் துறை சார்பாக 16,532 கோடி ரூபாய் மதிப்பிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் போடப்பட்டன.

எங்கள் ஆட்சியின் இறுதியில் 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், 44 திட்டங்கள் வணிக உற்பத்தியைத் துவக்கிவிட்டன. 27 திட்டங்கள் பல்வேறு செயல்பாட்டு நிலைகளில் இருந்தன. எங்கள் ஆட்சியின் இறுதியில் சுமார் 72 சதவீத திட்டங்கள் செயல்பாட்டில் இருந்தது. இதன்படி பல நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியைத் துவக்கி இருந்தன. சில நிறுவனங்கள் ஆயத்தப் பணிகளை துவக்கி இருந்தன.

தொடர்ந்து, எனது தலைமையிலான அரசு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை 2019-ல் நடத்தி, 3 லட்சத்து 501 கோடி ரூபாய் முதலீட்டில் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இவற்றில், 24,492 கோடி ரூபாய் முதலீட்டில், 1 லட்சத்து 10 ஆயிரத்து 844 நபர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி அளித்துள்ள 81 திட்டங்கள், அதாவது 27 சதவீத திட்டங்கள் ஒரே ஆண்டில் தமது வணிக உற்பத்தியைத் துவக்கி சாதனை படைத்துள்ளன. இதன்படி, ஹூண்டாய் விரிவாக்கம், ஃபாக்ஸ்கான், சால்காம்ப், டாடா கன்சல்டன்சி சர்விஸ், மேண்டோ, ஹானன், டி.பி.ஐ. கம்போசிட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இதில் குறிப்பிடத்தக்கவை.

2020ம் ஆண்டு முழுவதும் கரோனா காலக் கட்டத்தினால் ஒருசில தொழில்கள் துவங்குவதற்கு காலதாமதம் ஆகியது. இருப்பினும் 2021 ஆரம்பத்திலேயே, புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையொப்பமிட்ட பல தொழில் முனைவோர்கள் தமிழகத்தில் தொழில் துவங்குவதற்கான பணிகளை ஆரம்பித்துவிட்டனர் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். அதன் தொடர்ச்சியாகத்தான் இன்றுவரை பல நிறுவனங்கள் இந்த ஆட்சியிலும் தங்களது உற்பத்தியைத் துவக்கி வருகின்றன.

மேலும், தமிழகத்தில் தொழில் துவங்க முன்வரும் வெளிநாடு வாழ் தமிழ் மக்களுக்கு இரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்க "யாதும் ஊரே" என்ற புதிய திட்டத்தை நான் நேரடியாக அமெரிக்காவில் துவக்கி வைத்தேன். தொடர்ந்து துபாய்க்கும் சென்று முதலீட்டாளர்களை சந்தித்தேன். இந்த வெளிநாட்டுப் பயணத்தின் மூலம் 41 நிறுவனங்களின், 8 ஆயிரத்து 835 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முதலீடுகளை தமிழ் நாட்டுக்கு ஈர்த்து, 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு, புதிய வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டன.

கரோனா ஊரடங்கு காலத்தில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில் முனைவோரை அழைத்து நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி, 60,674 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 1 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 73 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

அதிமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்களைத்தான் கடந்த இரண்டு வருடங்களாக, இன்றுவரை திமுக அரசு தாங்கள் செய்ததாகக் கூறி வருகிறது. புதிதாக எந்தஒரு வெளிநாட்டு ஒப்பந்தமும் இந்த ஆட்சியில் கொண்டுவந்ததாகத் தெரியவில்லை.

அதிமுக ஆட்சியின்போது, தேசிய அளவிலான ஜிடிபியுடன் ஒப்பிடும்போது, தமிழகத்தின் ஜிடிபி கூடுதலாக இருந்தது. "தான் திருடி பிறரை நம்பாள்" என்பது போல் இன்றைய ஏமாற்று அரசின் ஆட்சியாளர்கள், எதிர்க்கட்சியாக இருந்தபோது அதிமுக அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தியதை மக்கள் மறக்கவில்லை.

நிறைவேற்ற முடியாத, பொய்யான வாக்குறுதிகளை அளித்து, பின் வாசல் வழியாக ஆட்சிக்கு வந்த இந்த திமுக அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில், பொதுமக்களுக்கு பணப் பலன் அளிக்கக்கூடிய எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல், புதிய திட்டங்களையும் தொடங்காமல், ``கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன்’’ செய்வதிலேயே முதல்வரின் மொத்தக் குடும்பமும் மும்முரமாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

திமுக அரசின் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "குறுகிய காலத்தில், முதல்வரின் மகனும், மருமகனும் அடித்த 30,000 கோடியை எங்கு பதுக்குவது என்று தெரியாமல் தவிப்பதாக’’ ஒப்புதல் வாக்குமூலம் அளித்தது, இந்த ஆட்சியின் ஊழலை பறை சாற்றுகிறது.

2021ம் ஆண்டு சட்டமன்றப் பொதுத் தேர்தல் நடைபெற்ற நேரத்தில் ஏழை பங்காளனாகவும், ஊழலை ஒழிக்கும் போராளியாகவும், சாமானிய மக்களின் தோழனாகவும் நடித்து பொய் வாக்குறுதிகளை அள்ளி வழங்கி மக்களை நம்ப வைத்து, வாக்குப் பதிவு முடிந்த அடுத்த நாளே தன் சுயரூபத்தைக் காட்டி, தன் குடும்ப உறுப்பினர்கள் அனைவருடனும் தனி விமானத்தில் மதுரைக்கும், அங்கிருந்து கொடைக்கானலுக்கும் இன்பச் சுற்றுலா சென்று வந்தவர்தான் இந்த திமுக அரசின் முதல்வர் ஸ்டாலின்.

பிறகு ஆட்சிக்கு வந்தவுடன், தொழில் முதலீடுகளை ஈர்க்கச் செல்வதாக கூறி, தன் குடும்பத்துடன் தனி விமானத்தில் துபாய்க்கு இன்பச் சுற்றுலா சென்றார் பொம்மை முதல்வர் ஸ்டாலின். ஒருசில நிறுவனங்களுடன் தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டதாக அறிவித்தார். 6,000 கோடி முதலீடுகள் வரும் என்று வாயால் வடை சுட்டார். இது நடந்து முடிந்து 700 நாட்கள் கடந்துவிட்டன. இதுவரை எந்த முதலீடும் வந்ததாகத் தெரியவில்லை. இவர்கள் தங்கள் குடும்பத்தின் ஊழல் பணத்தை முதலீடு செய்யச் சென்றார்கள் என்று மக்களிடையே எழுந்த புகார் குறித்து இதுவரை முதல்வர் தகுந்த விளக்கம் அளிக்கவில்லை.

தொழில் சுற்றுலா என்று திமுக அரசின் முதல்வருடைய மகன் மற்றும் அவரது மருமகன் ஆகியோர் தமிழக மக்களைப் பற்றி கவலையில்லாமல் மாறிமாறி லண்டன் மற்றும் வெளிநாடுகளுக்குப் பறந்து செல்வதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் ஏற்கெனவே குடும்பத்துடன் துபாய் இன்பச் சுற்றுலாவை மேற்கொண்ட திமுக அரசின் முதல்வர் இப்போது, மீண்டும் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு தொழில் முதலீடு ஈர்ப்பு என்ற பெயரில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளார்.

முன்னாள் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், 30 ஆயிரம் கோடி ரூபாய் குறித்து பேசிய ஆடியோ டேப் லீக் ஆனவுடன், மருமகனும், மகனும் பதறிப் போய் உடனடியாக லண்டன் சென்று வந்தனர். தொடர்ந்து முதல்வர் இன்று சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்து தமிழகத்திற்கு வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கப் போகிறாரா? அல்லது முதலீடு செய்யப் போகிறாரா? என்று தமிழக மக்களும் சமூக ஊடகங்களும் கேள்வி எழுப்பியுள்ளன." இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்