மதுரையில் ஜல்லிக்கட்டு காளையை சீராக கொண்டு சென்ற மணமகள்

By என்.சன்னாசி

மதுரை: மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையில் திருமணம் முடிந்த கையோடு, சீராக தான் வளர்த்த ஜல்லிக்கட்டு காளையை மணமகள் புகுந்த வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அய்யங்கோட்டையைச் சேர்ந்த மணமகள் சிவப்பிரியா என்பவருக்கும், நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த மணமகன் ராஜபாண்டிக்கும் நேற்று 22.05.2023 மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா நாகமலை புதுக்கோட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் திருமணம் குடும்பத்தினர் முன்னிலையில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

மணமகள் சிவப்பிரியா பொதுப் பணித்துறையில் பணியாற்றி வருவதோடு, தமிழர் பாரம்பரியம் மாறாமல் ஜல்லிக்கட்டு காளையையும் வளர்த்து வந்துள்ளார். நேற்று திருமணம் முடிந்த கையோடு திருமண சீருடன் தான் வளர்த்து வந்த ஜல்லிக்கட்டு காளையையும் மணமகள் புகுந்த வீட்டிற்கு அழைத்து சென்றார்.

முன்னதாக ஜல்லிக்கட்டு காளையை மணமேடையில் ஏற்றி மணமகனுக்கு அறிமுகம் செய்தார் மணமகள். தொடர்ந்து மணமகனும், மணமகளும் ஜல்லிக்கட்டு காளைக்கு முத்தமிட்டு புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர். ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் சமீபத்தில் வெற்றி கிடைத்துள்ள சூழலில் பாரம்பரியம் மாறாது தான் வளர்த்த காளையை புகுந்த வீட்டிற்கு மணமகள் அழைத்துச் சென்றுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE