பாளையங்கோட்டை | ரூ.14 கோடியில் அமைக்கப்பட்ட மைதான கேலரி மேற்கூரைகள் மழைக்கு தாக்குப்பிடிக்காமல் சாயந்தன

By அ.அருள்தாசன்

திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் ரூ.14 கோடியில் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட வ.உ.சி மைதான கேலரியின் மேற்கூரைகள் சூறைக்காற்றுடன் பெய்த மழைக்கு தாக்குப்பிடிக்காமல் சாய்ந்து விழுந்தது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆட்கள் நடமாட்டம் இல்லாத காரணத்தால் அசம்பாவிதங்கள் நிகழவில்லை.

திருநெல்வேலி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.965 கோடியில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்தவகையில் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம் ரூ.14 கோடியில் புதுப்பிக்கப்பட்டு சமீபத்தில் திறக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்த மைதானத்தில் கேலரிகள் அமைக்கப்பட்டு, அவற்றின்மேல் மேற்கூரைகளும் அமைக்கப்பட்டிந்தன. இவை தரமாக அமைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடக்கத்தில் இருந்தே கூறப்பட்டு வருகிறது. தற்போது மாவட்ட மற்றும் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகளும், தனியார் நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பாளையங்கோட்டையில் இன்று பிற்பகலில் 2 மணிக்கு தொடங்கி 1 மணிநேரத்துக்கு இடி மின்னலுடனும் பலத்த சூறை காற்றுடனும் மழை கொட்டியது. இந்த சூறைக்காற்றுக்கு தாக்குப்பிடிக்காமல் வ.உ.சி. மைதானத்தின் மேற்குப்புறத்தில் கேலரிகளின் மேல் அமைக்கப்பட்டிருந்த 2 மேற்கூரைகளும், இரும்பு தூண்களும் சரிந்து விழுந்தன. அப்பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழவில்லை. பல கோடி செலவில் அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த சில மாதங்களிலேயே மேற்கூரைகளும், இரும்பு தூண்களும் சரிந்து விழுந்துள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் மேற்கூரைகள் சரிந்து விழுந்தது குறித்து தகவல் கிடைத்ததும் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் சிவ. கிருஷ்ணமூர்த்தி அதிகாரிகளுடன் வ.உ.சி. மைதானத்துக்கு வந்து பார்வையிட்டார். பின்னர் அவர் கூறும்போது, "இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு, தவறு நடந்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சரிந்து விழுந்த மேற்கூரை உடனே அகற்றப்படும்" என்று தெரிவித்தார். இதையடுத்து வ.உ.சி. மைதானம் மூடப்பட்டது.

முன்னதாக, பாளையங்கோட்டையில் இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் பலத்த மழை காரணமாக பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டையில் இன்று முற்பகல் வரையில் அக்னி நட்சத்திர வெயில் சுட்டெரித்தது. இந்நிலையில் பிற்பகலில் வானில் கருமேகங்கள் திரண்டன. பிற்பகல் 2 மணியளவில் திடீரென்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மழையுடன் சூறைக்காற்றும் வீசியது. அரைமணிநேரம் நீடித்த இந்த மழையால் சாலையோரங்களிலும், தாழ்வான பகுதிகளிலும் குளம்போல் தண்ணீர் தேங்கியது.

சூறைக்காற்று காரணமாக திருவனந்தபுரம் சாலை, ஹைகிரவுண்ட் சாலை, ரோஸ்மேரி பள்ளி சாலை, ஏ.ஆர். லைன் சாலையில் பல்வேறு இடங்களில் பழமையான மரங்கள் சரிந்து விழுந்தன. மேலும் மரக்கிளைகளும் முறிந்து சாலையில் விழுந்தன. இதனால் இப்பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்பு படையினரும், மாநகராட்சி அலுவலர்களும், பணியாளர்களும் மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தினர்.

இன்று மாலை 4 மணி நிலவரப்படி பாளையங்கோட்டையில் 7 மி.மீ., திருநெல்வேலியில் 1 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE