சென்னை: “தமிழகத்தில் தொடரும் ஊழல் முறைகேடுகள்; கள்ளச் சாராயம் மற்றும் போலி மதுபானங்களால் இறப்பு; கொலை, கொள்ளை, வழிப்பறி, போதைப் பொருட்கள் புழக்கம் உள்ளிட்ட சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்தும்; இவைகளுக்கு முழு பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும்; கழகத்தின் சார்பில், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களில் மே 29-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஊழலும், வன்முறையும், அராஜகமும் ஒன்றாய் சேர்ந்தது தான் திமுக என்பதை நிரூபிக்கும் வகையிலும்; திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்குக் கூட மிகுந்த சிரமத்துடனும், அச்சத்துடனும் வாழ்ந்து வரும் நிலையிலும்; திமுக ஆட்சி `திராவிட மாடல்’ ஆட்சி என்று தன்னைத் தானே தம்பட்டம் அடித்துக்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் நடைபெற்று வரும் பல்வேறு ஊழல்களையும், வன்முறைச் சம்பவங்களையும் தடுத்து நிறுத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், பல்வேறு வகைகளில் தன் குடும்பத்தை வளப்படுத்தும் வேலைகளில் மட்டுமே தொடர்ந்து ஈடுபட்டு வருவது தமிழகத்தின் சாபக்கேடாகும்.
மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய விடியா திமுக ஆட்சியின் அமைச்சர்களோ, வாக்களித்த மக்களை கேலியும், கிண்டலும் செய்து, மிரட்டும் தொணியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருவதை இந்த நாட்டு மக்கள் அனைவரும் கண்கூடாகப் பார்த்து வருகிறார்கள். திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த இரண்டு ஆண்டு காலத்தில், அனைத்துத் துறைகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. திமுக ஆட்சியால் பலனடைந்தவர்கள் முதலமைச்சரின் குடும்பமும், அவரது சொந்தங்களும் தான். தமிழ் நாட்டில் ஊழல் அசுர விகிதாச்சாரத்தை எட்டியுள்ளது. ஊழல் நடவடிக்கைகள் மற்றும் நிர்வாகத் திறமையின்மை ஆகியவற்றால், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைமை கடுமையாக சீர்குலைந்துள்ளது. மாநிலத்தில் மனித உரிமைகள் கடுமையாக மீறப்படுவதற்கு ஆளும் திமுக அரசே பொறுப்பாகும்.
மின் கட்டணம், பால் விலை, சொத்து வரி, குடிநீர், கழிவு நீர் இணைப்பு முதலானவற்றின் கட்டணங்களை உயர்த்தி, மக்களை தாங்கொணா துயரத்திற்கு ஆளாக்கியது. கடந்த ஒரு வாரத்தில், விழுப்புரம் மாவட்டத்தில் - 15 பேர்; செங்கல்பட்டு மாவட்டத்தில் – 8 பேர்; தஞ்சாவூர் மாவட்டத்தில் – 2 பேர் என 25 பேர் கள்ளச் சாராயத்தால் இறந்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம், விடியா திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மை மற்றும் ஆளும் கட்சியினர் கள்ளச் சாராய விற்பனையில் நேரடியாக ஈடுபட்டுள்ளதே ஆகும். திமுக-வினரின் பல்வேறு அதிகார துஷ்பிரயோகங்கள், மிரட்டல்கள் காரணமாக அரசு அதிகாரிகள் தங்கள் கடமைகளை செய்ய முடியாமல் பரிதவித்து வருவதோடு, உயிரிழப்புகளும் நடந்தேறியுள்ளன. இருசக்கர வாகனத்தில் சென்று செயின் பறிப்பு என்ற நிலை மாறி, காரில் சென்று செயின் பறிப்பில் ஈடுபடுவது; முதியவர்களை குறிவைத்து மனம் பதைபதைக்கும் வகையில் ஒரே மாதிரியாக கொலை செய்வது; கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் நடமாட்டத்தால் இளைய தலைமுறையினரும் பாதிக்கப்பட்டு, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பல்வேறு வகைகளில் சீர்கெட்டுள்ளது.
» ஆவின் பணியாளர்களுக்கு 12 உத்தரவுகள்: நிர்வாக சீரமைப்பு தொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ் அதிரடி
30 ஆயிரம் கோடி ரூபாய்க்குமேல் சொத்து குவித்துள்ள முதலமைச்சரின் குடும்பம் மற்றும் இந்த ஊழல் வருமானத்தை வழக்கமான வருமானத்தில் இணைக்க வழி தெரியாமல் திணறுவது குறித்து, நிதி அமைச்சர் பேசும் ஆடியோ நாடாக்கள், அரசாங்கத்தில் நிலவும் ஊழலை ஒப்புக்கொள்வது தெளிவாகி உள்ளது. முதலமைச்சரின் குடும்பத்தினரால், சினிமா துறையும், ரியல் எஸ்டேட் துறையும் கபளீகரம் செய்யப்பட்டுள்ளது.டாஸ்மாக் மதுக் கடைகளில் சட்ட விரோத பார்களை 24 மணி நேரமும் நடத்தி, போலி மதுபானங்களை விற்பனை செய்து, மக்களின் உயிரை காவு வாங்கும் அபாய செயலில் ஈடுபடுவோருக்கு விடியா திமுக அரசு துணை போகிறது.
மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் பல்வேறு ஒப்பந்தப் பணிகளிலும் அராஜக முறையில் ஆதாயம் ஈட்டி வருகிறது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் விடியா திமுக ஆட்சியில் தொடர்ந்து நடைபெற்று வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்.
இரண்டாண்டு இருண்ட திமுக ஆட்சியில், தமிழகத்தில் தொடரும் ஊழல் முறைகேடுகள்; கள்ளச் சாராயம் மற்றும் போலி மதுபானங்களால் இறப்பு; கொலை, கொள்ளை, வழிப்பறி, போதைப் பொருட்கள் புழக்கம் உள்ளிட்ட சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்தும்; இவைகளுக்கு முழு பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், வருகின்ற 29.05.2023 – திங்கட் கிழமை காலை 10 மணியளவில், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களில், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள் முன்பும், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள் இல்லாத மாவட்டங்களில் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு அல்லது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை, சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள், தங்கள் மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும்.
மக்கள் நலனை முன்வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில், சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்; கழகம் மற்றும் சார்பு அமைப்புகளில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும்; உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும்; கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், மக்களை பல்வேறு வகைகளில் வாட்டி வதைத்து வரும் திமுக அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்கள் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு ஆதரவு நல்கிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago