புதுச்சேரியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தரமற்ற மாத்திரை விநியோகம்? - நோயாளியுடன் எதிர்க்கட்சித் தலைவர் நேரில் ஆய்வு

By செய்திப்பிரிவு

புதுச்சேரி: புதுச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தரமற்ற மாத்திரை விநியோகம் செய்யப்படுவதாக வந்த புகாரை அடுத்து நோயாளியுடன் எதிர்க்கட்சித் தலைவர் நேரில் ஆய்வு செய்தார்.

புதுச்சேரி வில்லியனூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இங்கு சிகிச்சைக்கு வருபவர்களுக்கு தரமற்ற மாத்திரை விநியோகம் செய்யப்படுவதாக எழுந்த புகாரையடுத்து நோயாளியுடன் எதிர்க்கட்சித்தலைவர் சிவா நேரில் ஆய்வு செய்தார். கருப்புப் புள்ளிகளுடன் இருந்த மாத்திரைகளை திருப்பி அனுப்புவதாக தலைமை மருத்துவர் உறுதி தந்துள்ளார். புதுச்சேரியிலுள்ள வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலையம் 10 படுக்கை வசதிகளுடன் புதிய மருத்துவமனை வளாகம் கட்டப்பட்டுள்ளது. ஆனால், போதிய உள்கட்டமைப்பு வசதிகள், போதிய மருத்துவர்கள் செவிலியர்கள் இல்லாமல் இருப்பதாகவும் புகாரை தொகுதி எம்எல்ஏவும், எதிர்க்கட்சித்தலைவருமான சிவா சுகாதாரத்துறையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், வில்லியனூரைச் சேர்ந்த மோகன்ராஜ் (23), காய்ச்சல் மற்றும் சளிக்காக மருத்துவரை அணுகி உள்ளார். அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர் மாத்திரைகளை பரிந்துரைத்துள்ளார். அந்த சீட்டுடன் ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே அவர் மருந்து மாத்திரைகள் வாங்கி உள்ளார். ஆனால் மாத்திரையைப் பிரித்து பார்த்தபோது அவை கரும்புள்ளிகள் உடன் இருப்பதை பார்த்தார். பணியில் இருந்த மருத்துவரை பார்த்து ஏன் மாத்திரைகள் இதுபோன்று இருக்கிறது என்று கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு மருத்துவர் சரியாக பதில் அளிக்காததால் அந்த வாலிபர் இன்று காலை தொகுதி எம்எல்ஏவான சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவாவிடம் புகார் அளித்தார்.

அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நோயாளியுடன் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்ற எதிர்க்கட்சித் தலைவர், அங்கு பணியில் இருந்த தலைமை மருத்துவர் திலகவதியிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து மருந்தகத்தில் இருந்த மாத்திரைகளை ஆய்வு செய்தார். அப்போது ஒரு பிரிவு மாத்திரைகள் கரும்புள்ளிகளுடன் இருந்தது. அவை தயாரிக்கும் போது நடந்திருக்கும் என்றும் அதனை திருப்பி அனுப்புவதாக மருத்துவர் தெரிவித்தார். தொடர்ந்து ஆய்வு செய்து எதிர்க்கட்சித் தலைவர், தரமான மருந்து, மாத்திரைகள் வாங்கி நோயாளிகளுக்கு வழங்க மருத்துவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE