திமுக ஆட்சி குறித்து ஆளுநரிடம் புகார்: சென்னையில் அதிமுக பேரணியால் போக்குவரத்து நெரிசல்

By செய்திப்பிரிவு

சென்னை: திமுக ஆட்சியில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஆளுரிடம் புகார் அளிக்க அதிமுக சார்பில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை - கிண்டியில் பேரணி நடைபெற்று வருகிறது. இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும், கொலை, கொள்ளை அதிகரித்துவிட்டதாகவும் அதிமுக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச் சாராயத்தால் மொத்தம் 23 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே, திமுக ஆட்சி தொடர்பாக ஆளுநரிடம் புகார் அளிக்கப்படும் என்று அதிமுக தலைமை சார்பில் அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் கிண்டியில் பேரணி நடைபெற்று வருகிறது.

அதன்படி வேளச்சேரி சாலை, சைதாப்பேட்டை, சென்னை மாநகர அரசு போக்குவரத்துக் கழக பணிமனையின் பின்புறம் அனைவரும் குழுமி, அங்கிருந்து சின்னமலை தாலுகா அலுவலக சாலை வழியாக பேரணியாக ஆளுநர் மாளிகை செல்கின்றனர். இதனைத் தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் ஆளுநரை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளனர்.

இந்தப் பேரணியில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், எம்.பிக்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உள்ளனர். இதன் காரணமாக சைதாப்பேட்டை, சின்னமலை, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE