நெல்லை மத்திய மாவட்டச் செயலாளராக மைதீன்கான் நியமனம்; மிசா பாண்டியன் சஸ்பெண்ட்: திமுக நடவடிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: நெல்லை மத்திய மாவட்ட செயலாளராக மைதீன்கானை நியமித்தும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதற்காக மதுரை மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மிசா பாண்டியனை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கியும் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

புதிய பொறுப்பாளர் நியமனம்: இதுதொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி மத்திய மாவட்டக் கழகச் செயலாளராகப் பணியாற்றி வரும் அப்துல் வகாப் அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக டி.பி.எம்.மைதீன்கான் திருநெல்வேலி மத்திய மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட, மாநகர நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று அவர் கூறியுள்ளார்.

மிசா பாண்டியன் சஸ்பெண்ட்: இதுதொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மிசா பாண்டியன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிமாக நீக்கி வைக்கப்படுகிறார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுகவில் மொத்தம் 72 மொத்த மாவட்டச் செயலாளர்கள் உள்ளனர். அண்மையில், திமுக மாவட்டச் செயலாளர்கள் உடன், கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். கட்சிப்பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும்படி 10 மாவட்டச் செயலாளர்களுக்கு ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்ததாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE