அமைச்சர் பதவியிலிருந்து செந்தில்பாலாஜியை உடனடியாக நீக்க வேண்டும்- ஆளுநரிடம் அண்ணாமலை மனு

By செய்திப்பிரிவு

சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜி தமிழக அமைச்சரவையில் இருந்து உடனடியாக விடுவிக்க ஆளுநர் முதல்வருக்கு தெரிவிக்க வேண்டும் என்று தமிழக ஆளுநரிடம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, "ஒரு அமைச்சர் எடுத்துக்கொண்ட பதவிப்பிரமாணத்தை மீறும்போது, அரசியலமைப்புச் சட்டத்தை காக்க வேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு உள்ளது அதைப் பயன்படுத்தி அமைச்சரை நீக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளதாக" கூறினார்.

இரண்டு மனுக்கள்: விவரம் என்ன? தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில், அக்கட்சியின் மகளிர் அணியினர் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று சந்தித்து இரண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை கூறியது: "விஷச்சாராய மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஆளுநரிடம் கோரிக்கை வைத்தோம். தமிழகத்தில் டாஸ்மாக்கின் ஆதிக்கம் எப்படி உள்ளது என்பது குறித்து ஆளுநரிடம் விவரமாக எடுத்துக் கூறியிருக்கிறோம். அதேநேரம், ஒரு ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக இன்னும் 15 நாட்களுக்குள், முதல்வருக்கு, எப்படி டாஸ்மாக்கை குறைத்து அதே வருமானத்தை வேறு வழிகளில் கொண்டு வருவது என்பது குறித்த வெள்ளை அறிக்கை வழங்க இருப்பதாக ஆளுநரிடம் தெரிவித்திருக்கிறோம்.

அமைச்சர் செந்தில்பாலாஜி தமிழக அமைச்சரவையில் இருந்து உடனடியாக விடுவிக்க ஆளுநர் முதல்வருக்கு தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருக்கிறோம். அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக, தான் எடுத்திருக்கும் பதவிப்பிரமாணத்துக்கு எதிராக அமைச்சர் செந்தில்பாலாஜியின் நடவடிக்கை இருக்கும்போது, ஆளுநர் முதல்வருக்கு அறிவுறுத்தி, செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து விடுவிக்க வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அவர்மீதான வழக்கை விசாரணையில் காவல்துறைக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறோம்" என்றார்.

அப்போது அவரிடம் கேட்கப்பட்ட, அமைச்சரை நீக்க பரிந்துரைக்கு ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "ஒரு அமைச்சர் எடுத்துக்கொண்ட பதவிப்பிரமாணத்தை மீறும்போது, அரசியலமைப்புச் சட்டத்தை காக்க வேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு உள்ளது. எங்களைப் பொருத்தவரை அந்த அதிகாரம் ஆளுநருக்கு இருக்கிறது என நம்புகிறோம். இந்த விவகாரத்தில் எந்த குழப்பமும் இல்லை. காவல்துறை முதல்வரின் கீழ் வருகிறது. அதே முதல்வர் தலைமையிலான அமைச்சரவையில் செந்தில்பாலாஜி இருக்கிறார். அவ்வாறு இருக்கும்போது எப்படி நேர்மையான விசாரணை நடக்கும். அதற்கு வாய்ப்பே இல்லை. அதனால்தான் ஆளுநரிடம் கோரிக்கை மனு கொடுத்திருக்கிறோம்.

அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, இந்த விவகாரத்தில், முதல்வருக்கு அறிவுறுத்தவும், விசாரணை முடியும்வரை அமைச்சரவையில் இருந்து தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவே நீக்குமாறு கூறலாம். இவை அனைத்துமே ஆளுநரின் கையில் உள்ளது. எனவே, அதை ஆளுநர் பயன்படுத்துவார் என்று நம்புகிறோம்" என்றார்.

"தமிழக காவல்துறைக்கு சுதந்திரம் இல்லை" காவல்துறை சுதந்திரமாக செயல்படவில்லையா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "தமிழக காவல்துறைக்கு சுதந்திரம் இல்லை. நீங்களோ, நானோ காவல் நிலையத்திற்குச் சென்று, ஒரு திமுக ஒன்றியச் செயலாளரின் அனுமதி இல்லாமல், நில பிரச்சினை தொடர்பாக புகார் அளிக்க முடியுமா? மோசடி வழக்கு புகார் கொடுக்க முடியுமா? நிச்சயமாக, இல்லை. அதை நாங்கள் இன்றைக்கு சொல்லவில்லை.

கடந்த இரண்டு வருடமாகவே தமிழக பாஜகவின் குற்றச்சாட்டு, காவல்துறைக்கு சுதந்திரம் இல்லை என்பதுதான். அவர்களுடைய கைகள் கட்டப்பட்டுள்ளன. இதே காவல்துறை, செந்தில்பாலாஜி விவகாரத்தில் அப்போது வழக்குப் பதிந்துள்ளனர். இதே காவல்துறைதான் அப்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. ஆனால் செந்தில்பாலாஜிக்கு எதிராக புகார் கொடுத்தவர்கள் சமரசம் செய்துகொண்டதாக கூறியதைத் தொடர்ந்து இரண்டே நாட்களில், உயர் நீதிமன்றமும் சமரசத்தை ஏற்றுக்கொள்கிறது. இதனால்தான், உச்ச நீதிமன்றம் தனது கண்டனங்களைப் பதிவு செய்திருக்கிறது. இந்த முழு வழக்கையும் பார்த்தால், திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, காவல்துறையை மட்டுமல்ல, அரசு வழக்கறிஞர்களையும் தவறாக பயன்படுத்தியுள்ளனர்" என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE