ரூ.2 ஆயிரம் நோட்டுகளை திரும்ப பெறுவதால் எந்தப் பயனும் ஏற்படாது: பிரேமலதா கருத்து

By செய்திப்பிரிவு

காரைக்கால்: தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: நாட்டில் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் கறுப்பு பணத்தை ஒழிக்க முடியவில்லை. தற்போது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. ஊழலும், கறுப்புப் பணமும் ஒழியப் போவதில்லை. இதெல்லாம் கண்துடைப்பு நடவடிக்கையாகும்.

திமுக ஆட்சிக்கு வரும் முன்பு ஒரு நிலைப்பாடு, ஆட்சிக்கு வந்த பின்னர் ஒரு நிலைப்பாடு என உள்ளது. மது விற்பனையால்தான், தமிழகத்தில் அதிகமான இளம் விதவைகள் உள்ளதாக ஆட்சிக்கு வரும் முன்பு, கனிமொழி எம்.பி. கூறினார். ஆனால், இப்போது அதுகுறித்து அவர் பேசுவதே இல்லை.

தமிழகத்தில் மது விற்பனை அதிகமாக உள்ளதுபோல, கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பயன்பாடும் உச்சத்தில் உள்ளது. இதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலுக்கு தேமுதிக தயார் நிலையில்தான் உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் உள்ளதால், வெகு விரைவில் அதற்கான பணிகளை தொடங்க உள்ளோம். தேர்தலில் தேமுதிகவின் நிலைப்பாடு குறித்து விரைவில் தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE