சென்னை, புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர் மின்தடை: தூக்கத்தைத் தொலைத்து தவிக்கும் மக்கள்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு பல இடங்களில் மின்தடை ஏற்படுவதால், பொதுமக்கள் தங்களது தூக்கத்தை தொலைத்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் நிலவிவருகிறது. ஒரு பக்கம் கத்திரி வெயிலும், மற்றொரு பக்கம் மொக்கா புயல் காரணமாக காற்றில் ஈரப்பதம் குறைந்ததால் கடும் வெப்பம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.

இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பலஇடங்களில் மின்தடை ஏற்படுகிறது. இதனால், இரவு நேரத்தில் நிம்மதியாக தூங்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: சென்னையின் முக்கியப் பகுதிகளான மயிலாப்பூர், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, வேளச்சேரி, பள்ளிக்கரணை, வில்லிவாக்கம், மாதவரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் பல இடங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.

ஏற்கெனவே, பகலில் வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம். இரவிலாவது நிம்மதியாக தூங்கலாம் என நினைத்தால், மின்தடை காரணமாக தூங்க முடிவதில்லை. இரவு முழுவதும் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் தூக்கம் கெடுகிறது. இதனால், தூக்கமின்றி உடல்நலம் பாதிக்கப்படுவதோடு, மறுநாள் வழக்கமான வேலைகளையும் செய்ய முடிவதில்லை. குறிப்பாக, வீடுகளில் கைக் குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள் உள்ளிட்டோர் கடுமையாக பாதிப்படைகின்றனர்.

மின்தடை ஏற்பட்டதும் மின்வாரியத்தின் மின்னக நுகர்வோர் சேவை மையத்தை தொடர்பு கொண்டால், உடனடியாக இணைப்பு கிடைப்பதில்லை. அவ்வாறு இணைப்பு கிடைத்து புகார் தெரிவித்தாலும் உடனடியாக மின்ஊழியர்கள் வந்துபார்ப்பது இல்லை. பல மணி நேரம் காலதாமதமாக வந்து சரிசெய்கின்றனர். எனவே, கோடைக்காலம் முடியும் வரை இரவு நேரத்தில் தடையில்லா மின்விநியோகம் செய்ய மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘சென்னையில் தினசரி மின்தேவை தற்போது அதிகரித்துள்ளது. அத்துடன், சென்னையில் வழக்கத்தைவிட தற்போது கடும் வெப்பம் நிலவுகிறது. ஏற்கெனவே, மின்விநியோகம் செய்ய பயன்படுத்தப்படும் மின்மாற்றிகள், ஒயர்கள் உள்ளிட்டவை இந்த வெப்பம் காரணமாக மேலும் சூடாகி பழுதாகின்றன.

ஒரே நேரத்தில்... மேலும், இரவு நேரத்தில் ஒரே சமயத்தில் எல்லாருடைய வீடுகளிலும் ஏசி பயன்படுத்தப்படுகிறது. இதனால், கூடுதல் மின்பளு ஏற்பட்டும்மின்சாதனங்கள் பழுதடைகின்றன. இவ்வாறு பழுதடையும் மின்சாதனங்கள் கண்டறியப்பட்டு உடனடியாக மாற்றப்படுகிறது.

மேலும், இரவு நேரத்தில் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக ஊழியர்கள் 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, எங்கெல்லாம் மின்தடை ஏற்படுகிறது என்பதைக் கண்காணிக்க குழுவும் அமைக்கப்பட்டு, மின்தடை ஏற்படாமல் தடுக்க தீவிர நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது'’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்