தமிழகத்தில் 39 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: டிஜிபியாக 4 பேருக்கு பதவி உயர்வு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் 39 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ள தமிழக அரசு, ஐபிஎஸ் அதிகாரிகளான ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர், அபய் குமார் சிங் மற்றும் வன்னியபெருமாள் ஆகியோருக்கு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஏடிஜிபி ராஜீவ் குமார் டிஜிபியாக நியமிக்கப்படுகிறார். ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், டிஜிபியாக பதவி உயர்வு வழங்கி, சென்னை காவலர் பயிற்சி அகாடமியின் டிஜிபியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

லஞ்ச ஒழிப்புத் துறை ஏடிஜிபி அபய்குமார் சிங் டிஜிபியாக பதவி உயர்வு வழங்கி , அத்துறையின் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். டான்ஜெட்கோ விஜிலென்ஸ் ஏடிஜிபி வன்னியபெருமாள் டிஜிபியாக பதவி உயர்வு வழங்கி அத்துறையின் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை சிவில் சப்ளை சிஐடி பிரிவு ஏடிஜிபி அருண் ஆவடி காவல் ஆணையராகவும், சென்னை பூக்கடை துணை ஆணையராக ஸ்ரேயா குப்தாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஆல்பர்ட் ஜானும், நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஹர்ஷ் சிங்கும், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஜவகரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ராஜேஷ்கண்ணன், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மணிவண்ணனும் நியமிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சாய் பிரணீத், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சாமிநாதனும் நியமிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சஷாங் சாய் நியமிக்கப்பட்டுள்ளார். இதுபோல் தமிழகத்தில் 39 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE