அமைச்சர் செந்தில்பாலாஜியை நீக்க வலியுறுத்துமாறு ஆளுநரிடம் நேரில் கோருவோம்: அண்ணாமலை

By செய்திப்பிரிவு

கோவை: தமிழக பாஜக குழு இம்மாதம் 21-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கவுள்ளதாகவும், அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜியை நீக்க வலியுறுத்துமாறு அவரிடம் கோர இருப்பதாகவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

பாஜக செயற்குழுக் கூட்டம் கோவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். 2024 நாடாளுமன்றத் தேர்தல் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை கூறியது: "நாளை மறுதினம், 21-ம் தேதி காலை 10 மணிக்கு, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் குழு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை ராஜ்பவனில் சந்திக்கிறோம்.

ஆளுநரிடம் இரண்டு மனுக்களை கொடுக்க இருக்கிறோம். ஆளுநர் நேரடியாக தலையிட்டு இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தறிகெட்டு ஓடக்கூடிய டாஸ்மாக்குக்கும், கள்ளச் சாராயத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதேபோல் இரண்டாவது மனு, அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்ய ஆளுநர் முயற்சி எடுக்க வேண்டும். இது தொடர்பாக தமிழக முதல்வருக்கு அறிவுறுத்த வேண்டும் என்பது உட்பட இரண்டு மனுக்களை கொடுக்க இருக்கிறோம்.

டாஸ்மாக் மற்றும் கள்ளச் சாராயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அமைச்சர் செந்தில்பாலாஜியை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, அவர் அமைச்சராக தொடர முடியாது. எனவே அவரை அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜியை நீக்க முதல்வரை ஆளுநர் வலியுறுத்த வேண்டும் என்ற இரண்டு கோரிக்கைகளை நாங்கள் முன்வைக்க இருக்கிறோம்" என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE