கள்ளச்சாராய விசாரணை | முழு தகவல் கிடைத்தவுடன் பதிலளிக்கப்படும்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக புதுச்சேரியிலும் விசாரணை, கண்காணிப்பு நடக்கிறது. முழு தகவல் கிடைத்தவுடன் இதில் பதில் தருகிறேன் என்று மாநில முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.

தமிழகத்தில் கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு புதுச்சேரியிலிருந்து கடத்திச் செல்லப்பட்டதே காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் புதுச்சேரி கலால்துறை துணை ஆணையர் சுதாகர் மாற்றப்பட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் குடித்ததில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் சிகிச்சையில் உள்ளனர்.

இந்த நிலையில், உயிரிழப்புக்கு காரணமான கள்ளச்சாராய மூலப் பொருள்கள் புதுச்சேரியைச் சேர்ந்தவர்களால் தமிழகத்துக்கு கடத்திச் செல்லப்பட்டு விற்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. புதுச்சேரியில் மது விற்பனை அனுமதிக்கும் கலால் துறையின் அதிகாரிகள் மீது காங்கிரஸ் மற்றும் அதிமுக, சுயேச்சை எம்எல்ஏ. உள்ளிட்டோரும் புகார் கூறி வருகின்றனர்.

இதற்கிடையே தமிழகத்தில் கள்ளச்சாராய உயிரிழப்புகளும் ஏற்பட்டதால் புதுச்சேரி கலால்துறை துணை ஆணையரைக் கண்டித்து சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு தலைமையில் கலால்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த நிலையில், கலால்துறை துணை ஆணையர் சுதாகர் அத்துறையிலிருந்து அலுவலகங்களுக்கான பொருள்கள் மற்றும் அச்சகப் பிரிவுக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

அவருக்குப் பதிலாக சமூக நலத்துறை இயக்குநராக இருந்த குமரன் கூடுதல் பொறுப்பாக கலால்துறை துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ரங்கசாமியிடம், கள்ளச்சாராய விவகாரத்தால் தான் புதுச்சேரி கலால்துறை துணை ஆணையர் இடமாற்றம் செய்யப்பட்டரா என்று இன்று கேட்டதற்கு, "அதிகாரிகள் இடமாற்றம் என்பது நிர்வாகத்தில் நடைபெறுவதுதான். அந்த அடிப்படையில் தான் அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டார்" என முதல்வர் கூறினார்.

அதைத்தொடர்ந்து புதுச்சேரியில் இருந்து கள்ளச்சாராயம் தமிழகத்துக்கு கடத்தப்படுவது மற்றும் கலால்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளதே என்று கேட்டதற்கு, "இது பற்றி முழு தகவல்கள் கிடைத்தவுடன் பதில் அளிக்கிறேன். தமிழகத்தில் விசாரித்து வருகின்றனர், புதுச்சேரியிலும் விசாரித்து, கண்காணித்து வருகின்றனர்" என முதல்வர் ரங்கசாமி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE