மின் கட்டணத்துக்கான போதிய வைப்புதொகை இருப்பு இல்லாதவர்களுக்கு நோட்டீஸ் - மின்வாரியம் உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: மின் கட்டணத்துக்கான போதிய வைப்புத் தொகை இருப்பில் இல்லாதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப மின்வாரியத்தின் வருவாய்ப் பிரிவின் தலைமை நிதி கட்டுப்பாட்டாளர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் அனைத்து தலைமைப் பொறியாளர்களுக்கு அவர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

உயரழுத்த பிரிவில் இணைப்பு பெற்ற நுகர்வோரின் கணக்கில் மின் கட்டணத்துக்கான போதிய வைப்புத் தொகை இருக்கிறதா என ஆண்டுக்கு ஒருமுறையும், தாழ்வழுத்த பிரிவில் இருக்கும் நுகர்வோருக்கு (எல்டிசிடி, 3 பிதொழிற்சாலை தவிர்த்து) ஆண்டுக்கு இரு முறையும் ஆய்வு செய்வது வழக்கம். அந்த வகையில் ஆய்வுப் பணிகளை வாரிய தலைமையகத்திலும், மின் பகிர்மான வட்டங்களிலும் மேற்கொண்டு, மே மாதத்துக்குள் முடிக்க வேண்டும்.

உயரழுத்த இணைப்பை பொறுத்தவரை சராசரி மின் கட்டணத்தின் 2 மடங்கு தொகை நுகர்வோரின் கணக்கில் முன்வைப்புத் தொகையாகவும், தாழ்வழுத்த இணைப்பில் மின் கட்டணத்தில் 3 மடங்கு தொகை முன்வைப்புத் தொகையாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். போதியதொகை இருப்பில் இல்லாதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.

அதே நேரம், மின் கட்டண ரசீதில் வைப்புத் தொகை இருப்பு,அதற்குரிய வட்டி விகிதம், செலுத்த வேண்டிய வைப்புத் தொகை உள்ளிட்ட விவரங்களை இடம்பெறச் வேண்டும். அதன் பின்னர், ரசீதில் வைப்புத் தொகை விவரம் இடம்பெற்றிருப்பது குறித்து, அலுவலகத்தில் உள்ள தகவல் பலகை வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

குறுஞ்செய்தி வாயிலாக...: வைப்புத் தொகை விவரங்களை மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி வாயிலாகவும் நுகர்வோருக்கு அனுப்ப வேண்டும். குறித்த காலத்துக்குள் வைப்புத் தொகையை செலுத்தாவிட்டால் அபராதம் செலுத்த நேரிடும் என்பதை தெரியப்படுத்த வேண்டும்.

நோட்டீஸ் வழங்கி 30 நாட்களுக்குப் பிறகும் வைப்புத் தொகையை செலுத்தாவிட்டால் மின் இணைப்பை துண்டிக்கலாம். அதிகமாக இருப்பின் திருப்பி வழங்குவதோ, சரிகட்டவோ செய்ய வேண்டும். இவ்வாறு மின்வாரியத்தின் வருவாய்ப் பிரிவின் தலைமை நிதி கட்டுப்பாட்டாளர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE