உச்ச நீதிமன்றத் தீர்ப்பு | தடையின்றி, நிம்மதியோடு ஜல்லிக்கட்டு நடத்துவோம் - மாடுபிடி வீரர்கள் நலச் சங்கம் மகிழ்ச்சி

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை: தை பிறக்கும்போது போட்டி நடக்குமா? நடக்காதா? என்ற பதற்றம், ஏக்கம் இனி தேவையில்லை. ஆண்டுதோறும் நிம்மதியோடு தடையின்றி ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவோம் எனக் கூறி மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டு பேரவை நிர்வாகிகள், மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் நலச் சங்கத்தினர் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்கு 2006-ம் ஆண்டு முதல் பல்வேறு நீதிமன்றத் தடையும், சட்ட சிக்கல்களும் ஏற்பட்டு வந்தன. 2017-ம் ஆண்டு மீண்டும் தடை விதிக்கப்பட்டபோது அலங்காநல்லூரில் மக்கள், ‘வாடிவாசலை திறக்கும் வரை வீட்டு வாசலை மிதிக்க மாட்டோம்’ என ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக குரல் கொடுத்தனர்.

அங்கு தொடங்கிய போராட்டம், கன்னியாகுமரி முதல் மெரினா கடற்கரை வரை பெரிய அளவில் உருவெடுத்தது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் சமூக வலைதளங்களில் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். அதனால், தமிழக அரசு சட்டப்பேரவையில் சிறப்புச் சட்டம் இயற்றி ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தி வந்தது. இந்தச் சட்டத்துக்கு எதிராகவும், விலங்குகளை மையமாக கொண்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன.

இந்த வழக்கில், ஜல்லிக்கட்டுக்குத் தடையில்லை என உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பை, மதுரை அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் போன்ற இடங்களில் பொதுமக்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், காளைகளுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியடைந்தனர்.

தீர்ப்பு குறித்து ஜல்லிக்கட்டுப் பேரவை மாநிலத் தலைவர் பி.ராஜசேகரன் கூறியதாவது: உளப்பூர்வமாக வரவேற்கக் கூடிய இந்தத் தீர்ப்பைத்தான் நாங்கள் மலைபோல் நம்பியிருந்தோம். 5 பேர் கொண்ட நீதிபதிகள் அனைவரும் ஒரே மாதிரி தீர்ப்பு வழங்கியது ஜல்லிக்கட்டுக்கு வெற்றி மேல் வெற்றி வந்ததுபோல் உணர்கிறோம்.

2006 முதல் 2023 வரை நீதிமன்றகளில் தடை போடுவது, நீக்குவது என தை பிறக்கும்போது ஜல்லிக்கட்டு திட்டமிட்டபடி நடக்குமா? நடக்காதா? என்ற பதற்றத்துடனும், ஏக்கத்துடனும் மக்கள் காத்திருப்பார்கள்.

போட்டி அமைப்பாளர்கள் கடைசி வரை அச்சத்துடனே போட்டி ஏற்பாடுகளைச் செய்வார்கள். இனி அந்த மாதிரி நிலைக்கு வாய்ப்பு இல்லை. போட்டியை திருவிழாபோல் ஆண்டுதோறும் உற்சாகமாக நடத்துவோம்.

பாரம்பரியம், கலாச்சாரத்தில் தலையிட முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இத்தீர்ப்பு மூலம் சட்டப் போராட்டத்துக்கு முடிவு கிடைத்துள்ளது என்று அவர் கூறினார்.

தமிழ்நாடு ஜல்லிக்கட்டுப் பயிற்சி மைய மாநில தலைவரும், மாடுபிடி வீரர்கள் நலச்சங்க மாநிலத் தலைவருமான முடக்காத்தான் மணி கூறுகையில், ‘‘2006 முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தி முடிப்பதற்குள் பல்வேறு போராட்டங்களைச் சந்தித்தோம். உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ள இந்தத் தீர்ப்பு இனி நிம்மதியான, தடையில்லாத ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த உதவியாக இருக்கும்.

இந்தத் தீர்ப்பில் முன்னாள் முதல்வர்கள் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி, தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் பங்கு இருக்கிறது. அவர்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE