மாவட்ட நிர்வாகத்தை தமிழக முதல்வர் கட்டுப்படுத்த வேண்டும்: கார்த்தி சிதம்பரம்

By இ.ஜெகநாதன்


காரைக்குடி: தமிழக முதல்வர் ஸ்டாலின், மாவட்ட நிர்வாகத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி முத்துப்பட்டினம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.15 லட்சத்தில் கட்டப்பட்ட கலையரங்கத்தை மாங்குடி எம்எல்ஏ முன்னிலையில் கார்த்தி சிதம்பரம் எம்பி திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது: " மாணவர்கள் ஆங்கில அறிவை வளர்த்து கொள்ள வேண்டும். பாடப் புத்தகங்களை விட தங்களுக்கு பிடித்த புத்தகளை அதிகளவில் படிக்க வேண்டும். மதிப்பெண் கல்வி முறையில் எனக்கு உடன்பாடு கிடையாது. அதிக மதிப்பெண்கள் எடுத்தவர்கள் கூட, தங்களுக்கு பிடித்த மொழியில் சரளமாக பேசவோ, எழுதவோ முடியாத நிலையில் உள்ளனர்.

நூலகத்துக்குச் சென்றால் கூட பாடப் புத்தகங்களையே படிக்கின்றனர். செய்திதாள்களை படிக்க வேண்டும். வாழ்க்கைக்கு தேவையான உத்திகளை நம் கல்வி முறை தருவதில்லை. மொபைல் வந்ததற்கு பின்னர், புத்தகங்களை படிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது" என்று அவர் கூறினார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "கடுமையான நடவடிக்கை எடுத்து கள்ளச் சாராயத்தை தடுக்க வேண்டும். கள்ளச் சாராயம் விற்பனை செய்வோர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்படுவர் என்று முதல்வர் கூறியதை வரவேற்கிறேன். மேலும் கள்ளச் சாராய விற்பனை மாவட்ட அதிகாரிகளுக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. இதனால், முதல்வர் மாவட்ட நிர்வாகத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

மக்களவைத் தேர்தலில் யார் பிரதமர் வேட்பாளர் என்பதை காங்கிரஸ், கூட்டணி கட்சிகள் கலந்து ஆலோசித்து முடிவு செய்யும். ஒரு மாநிலத்தில் ஒரு தலைவர் மட்டும் இருந்தால் முதல்வர் வேட்பாளரை அறிவித்து தேர்தலை சந்திக்கலாம். பல தலைவர்கள் இருந்தால், கர்நாடகம் போன்று முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் தேர்தலை சந்திக்கலாம்" என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE