4044 மெகாவாட்: சென்னையில் உச்சத்தை தொட்ட மின் தேவை

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் நேற்று மின் தேவை புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள் தூக்கமின்றி அவதிப்படுகின்றனர். இந்நிலையில், சென்னையில் சீரான மின் விநியோகத்தை மேற்கொள்வது குறித்து, மின்வாரிய அதிகாரிகளுடன், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர்,"சென்னையில் ஒருநாள் மின்நுகர்வு 423 மில்லியன் யூனிட் அளவுக்கு அதிகரித்துள்ளது. இது கடந்த 2019-20-ம் ஆண்டில் 369 மில்லியன் யூனிட் அளவு மட்டுமே இருந்தது. மின்தேவை அதிகரித்துள்ள போதிலும் எவ்வித பாதிப்பும் இன்றி சீரான மின்விநியோகம் செய்யப்பட்டு வரப்படுகிறது. சென்னையைப் பொறுத்தவரை வரும் ஆண்டுகளில் மின்தேவை அதிகரித்தாலும் எவ்விதத் தடையும் இன்றி சீரான மின்விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்." என்று தெரிவித்தார்.

இந்நிலையில் சென்னையில் நேற்று மின் தேவை புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கடந்த 5 ஆண்டு கால அதிமுக ஆட்சியில், சென்னையின் அதிகபட்ச மின் தேவை 18/06/2019 அன்று 3738 MW மட்டுமே.

சென்னையின் நேற்றைய 17/05/2023 மின் தேவை 4044 மெகாவாட் ஆகும். இந்த தேவை எந்த மின் தடையுமின்றி ஈடு செய்யப்பட்டது. இதற்கு முந்தைய உட்சபட்ச தேவை 16/05/2023ல் 4016 MW ஆகும்.

நேற்று சென்னையில் மின் நுகர்வு 9.03 கோடி யூனிட்கள் பயன்படுத்தப்பட்டது. இதற்கு முன் 16/05/2023 அன்று 9.02 கோடி யூனிட்கள் பயன்படுத்தப்பட்டிருந்தது.அதுவே அதிமுக ஆட்சியில், உட்சபட்சமாக வெறும் 6.64 கோடி யூனிட்களே 17/06/2019 அன்று பயன்படுத்தப்பட்டிருந்தது." இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE