கள்ளச்சாராயம், போதைப் பொருட்களை விற்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: கள்ளச்சாராயம், போதைப் பொருட்களை தொடர்ந்து விற்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், தமிழகத்தில் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று ஆய்வுக்கூட்டம் நடந்தது.

இதில், காவல் துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மாநில அளவில் மதுவிலக்கு தொடர்பாக தகவல் அளிக்க ‘10581’ என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் உள்ளது.

இதை மக்களிடம் பிரபலப்படுத்த வேண்டும். மாவட்டம்தோறும் உள்ள மதுவிலக்கு அமலாக்கத் துறை ஏஎஸ்பி, டிஎஸ்பியின் வாட்ஸ்அப் எண்களை அறிவித்து, அதன்மூலம் பெறப்படும் புகார்களை, சம்பந்தப்பட்ட ஏடிஜிபி கண்காணித்து, உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

இதுதொடர்பான அறிக்கையை, ஒவ்வொரு திங்கள்கிழமையும் உள்துறை செயலர் மூலம் முதல்வரின் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.

கள்ளச்சாராயம், போதைப் பொருட்கள் தடுப்பு தொடர்பாக ஒவ்வொரு திங்கள்கிழமையும் மாவட்ட அளவில் ஆட்சியர் தலைமையில் காவல், வருவாய் துறை அலுவலர்கள், டாஸ்மாக்மாவட்ட மேலாளர் ஆகியோரை கொண்டு மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்த வேண்டும். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு தகுந்த அறிவுரைகளை தலைமைச் செயலர் வழங்க வேண்டும்.

விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: கள்ளச்சாராயம், போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பள்ளி, கல்லூரிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சுயஉதவி குழுவை சேர்ந்த மகளிர் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

தொழிற்சாலைகளில் எரிசாராயம், மெத்தனால் பயன்பாட்டை கண்காணித்து, அது விஷச் சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்படாமல் இருப்பதை, காவல், கலால் துறை உதவி ஆணையர் கண்காணிக்க வேண்டும்.

மாவட்ட அளவிலான மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் சிறப்பாக செயல்படும் உயர் அதிகாரிகளை மாநில எல்லை பகுதிகள், கடலோர மற்றும் மலைப்பகுதி மாவட்டங்களில் நியமிக்க வேண்டும்.

வாழ்வாதாரத்தை மேம்படுத்த..: கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை அந்த தொழிலில் இருந்து விடுவித்து, அரசின் பல்வேறு வாழ்வாதார திட்டங்கள் மூலம் அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை உள்துறை செயலர் கண்காணிக்க வேண்டும்.

கள்ளச்சாராயம், போதைப் பொருட்களை தொடர்ந்து விற்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குற்றத் தடுப்பு நடவடிக்கைகள், போதைப் பொருள் ஒழிப்பு உள்ளிட்ட சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகள் குறித்துஉள்துறை செயலர், டிஜிபி தலைமையில் மாதம்தோறும் மாவட்ட எஸ்.பி.க்கள் கூட்டம் நடத்தப்பட்டு, காவல் துறையின் செயல்பாடுகளை கண்காணித்து, முதல்வர் அலுவலகத்துக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.

காவல் துறை அலுவலர்கள், தங்கள் முழு திறமை, நீண்ட அனுபவத்தை பயன்படுத்தி, மக்களின் நன்மதிப்பை பெறும்வகையில் சிறப்பாக செயல்பட வேண்டும். இவ்வாறு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் தலைமைச் செயலர் இறையன்பு, உள்துறை செயலர் அமுதா, டிஜிபி சைலேந்திர பாபு, சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபி சங்கர், மதுவிலக்கு அமலாக்கத் துறை கூடுதல் இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால், மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை ஆணையர் மா.மதிவாணன், டாஸ்மாக் மேலாண் இயக்குநர் லெ.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்