கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பாக ஆளுநரிடம் புகார்: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு

By செய்திப்பிரிவு

சென்னை: அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கட்சியின் அமைப்பு ரீதியான 63 மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றனர். 6 பேர் பங்கேற்கவில்லை.

செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கு திமுக அரசின் அலட்சியமே காரணம். எனவே, இது தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துப் புகார் அளிப்பது என்று இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்ததாகவும், இதற்காக ஆளுநரிடம் நேரம் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையை 2 கோடியாக உயர்த்துவது, ஏற்கெனவே உறுப்பினர்களாக இருப்பவர்களின் பதிவைப் புதுப்பிப்பது, மதுரையில் ஆக. 20-ம் தேதி நடைபெற உள்ள கட்சியின் மாநாட்டை, பொன்விழா மாநாடாகக் கொண்டாடுவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில், கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், “கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு எதிராக அதிமுக சார்பில் விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என்றார்.

முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கள்ளச்சாராய வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களில், குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதானவர்களின் எண்ணிக்கை தொடர்பான புள்ளிவிவரங்களை டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்டுள்ளார். அவை ஏன் உள்துறை கொள்கை விளக்கக் குறிப்பிலும், காவல் துறையை கவனிக்கும் முதல்வரின் சட்டப்பேரவை பதில் உரையிலும் இடம்பெறவில்லை?” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE