தமிழகம் உட்பட 4 மாநிலங்களில் ஒருங்கிணைக்கப்பட்ட யானைகள் கணக்கெடுப்புப் பணி தொடக்கம்

By எஸ்.ராஜா செல்லம்

தருமபுரி: தமிழகம் உட்பட 4 மாநிலங்களில் இன்று(புதன்) முதல் ஒருங்கிணைக்கப்பட்ட யானைகள் கணக்கெடுப்புப் பணி தொடங்கியுள்ளது.

வனப்பகுதிகளில் வசிக்கும் யானைகளின் துல்லியமான எண்ணிக்கையை ஆவணப்படுத்தும் வகையில் வனத்துறை சார்பில் யானைகள் கணக்கெடுப்புப் பணி அவ்வப்போது மேற்கொள்ளப்படும். அந்த வகையில் இன்று(புதன்) முதல் 3 நாட்களுக்கு தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய 4 மாநிலங்களில் ஒருங்கிணைக்கப்பட்ட யானைகள் கணக்கெடுப்புப் பணி தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி, கூடலூர், நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், மேகமலை, ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரை, தேனி, அம்பை, களக்காடு, கன்னியாகுமரி, நெல்லை, ஈரோடு, சத்தியமங்கலம், ஹசனூர், சேலம், தருமபுரி, ஓசூர், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கொடைக்கானல் என மொத்தம் 26 வனக் கோட்டங்கள் உள்ளன. அவற்றில் 699 பிரிவுகள்(Blocks) ஏற்படுத்தப்பட்டு இந்த யானைகள் கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது.

வனத்துறை அலுவலர்கள், பணியாளர்கள், வேட்டை தடுப்புக் காவலர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் அடங்கிய கணக்கெடுப்புப் பணிக் குழுவினருக்கு வனத்துறை நிபுணர்கள் மற்றும் உயிரியலாளர்கள் ஆகியோர் மூலம் போதிய பயிற்சிகள் அளிக்கப்பட்டு இந்த குழுவினர் களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இன்று, பிரிவுகள் வாரியாக கணக்கெடுப்புப் பணி நடந்தது. நாளை(வியாழன்) அதே பிரிவுகளில் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு அடையாளம் காணப்பட்ட வழிகளில் நடந்து சென்று வழிகளின் இருபுறங்களிலும் யானைகளின் சாணம் அடையாளம் காணும் மறைமுக கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.

கணக்கெடுப்பின் இறுதி நாளான 19-ம் தேதியன்று அந்தந்த பிரிவுகளில் உள்ள நீர்நிலைகளுக்கு வரும் யானைகளின் கூட்டத்தை கண்டறியும் வகையில் நீர்க்குழி கணக்கெடுப்பு முறை மேற்கொள்ளப்பட உள்ளது. தமிழகம் முழுக்க 699 பிரிவுகளிலும் 1731 வனத்துறையினர், 368 தன்னார்வலர்கள் என மொத்தம் 2,099 பேர் யானைகள் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேற்குறிப்பிடப்பட்ட 26 வனக்கோட்டங்களில் திருப்பத்தூர் வனக் கோட்டத்தில் மட்டும் இந்த கணக்கெடுப்புப் பணி நடைபெறவில்லை. ஏனெனில், இந்த வனக் கோட்ட எல்லைக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் தொடர்ந்து 3 யானைகள் மட்டுமே வசித்து வருகின்றன. இது நீங்கலான 25 வனக் கோட்டங்களிலும் கணக்கெடுப்புப் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கணக்கெடுப்புப் பணி நிறைவடைந்ததும் கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்ட அனைத்து விவரங்களையும் தொகுக்க, கணக்கெடுப்பு தகவல்கள் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE