கள்ளச் சாராய மரணங்கள்: தமிழக அரசிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை கேட்பு

By செய்திப்பிரிவு

சென்னை: கள்ளச் சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த விவகாரத்தில், இதுவரை என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை கேட்டுள்ளார்.

தமிழகத்தில் கள்ளச் சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த விவகாரத்தில் இதுவரை என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? கள்ளச் சாராயம் எப்படி விற்கப்படுகிறது? கள்ளச் சாராயம் விற்கப்படவில்லை எனில், எப்படி ஒரே நாளில் இத்தனை பேர் கைது செய்யப்பட்டது ஏன்? - இவை குறித்து அரசின் தலைமைச் செயலாளரிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை கேட்டுள்ளார்.

முன்னதாக, விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பம், செங்கல்பட்டு மாவட்டம் பெருங்கரணை கிராமங்களைச் சேர்ந்த 22 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து தமிழக அரசு மற்றும் காவல் துறை தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நிகழ்ந்த கள்ளச் சாராய இறப்புகள் குறித்தும், தமிழ்நாட்டில் கள்ளச் சாராயத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும், காவல் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத் தீர்வைத் துறை உயர் அலுவலர்களுடன் இன்று ஆய்வுக் கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில், கள்ளச் சாராயம் மற்றும் போதைப்பொருட்கள் தடுப்பு குறித்து ஒவ்வொரு திங்கள்கிழமையும் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்த வேண்டும் என்றும், கள்ளச் சாராயம் மற்றும் போதைப் பொருட்களைத் தொடர்ந்து விற்பனை செய்கிறவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். | விரிவாக வாசிக்க > கள்ளச் சாராயம், போதைப் பொருட்களை தொடர்ந்து விற்போர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

இதற்கிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சமும், சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த நிவாரண உதவிகளை அமைச்சர்கள் நேற்று வழங்கினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE