தஞ்சை - சூரக்கோட்டை சுத்தரத்தினேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.111 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு

By சி.எஸ். ஆறுமுகம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், சூரக்கோட்டையிலுள்ள சுத்தரத்தினேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.111 கோடி மதிப்பிலான நிலத்தை, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மீட்டனர்.

சூரக்கோட்டையில் சுத்தரத்தினேஸ்வரர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான மொத்தம் 147.84 ஏக்கர் நிலங்களை, சுமார் 120 பேர் ஆக்கிரமித்து, விவசாய நிலங்களாகவும், வீட்டு மனையாகவும் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்துள்ளனர்.

இதை அறிந்த அறநிலையத் துறை அதிகாரிகள், ஆக்கிரமிப்பாளர்களிடம் கடந்த 9 மாதங்களுக்கு மேலாகப் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஆக்கிரமிப்பாளர்கள் அனைவரும், 1959-ம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறக்கொடைகள் சட்டப்பிரிவு, 78-ன் கீழ் தாங்களாகவே முன் வந்து கோயில் நிலங்களை, கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைப்பதாக எழுத்துபூர்வமாக எழுதிக் கொடுத்துள்ளதும், எழுதி கொடுத்தும் அந்த நிலங்களை அம்மக்களே பயன்படுத்தி வந்திருகிறார்கள் என்று தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், இந்து அறநிலையத் துறை அந்த நிலங்களை மீட்டுள்ளது. அதன் பிறகு, தஞ்சாவூர் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் (பொறுப்பு) அனிதா தலைமையில், கோயில் நிலங்கள் தனி வட்டாட்சியர் சங்கர் முன்னிலையில், தக்கார் பிருந்தாதேவி உள்ளிட்ட அதிகாரிகள், அந்த இடத்தை கோயிலின் கீழ் கொண்டு வரப்பட்டதாக விளம்பரப் பலகை வைத்தனர்.

மீட்கப்பட்ட நிலங்களின் மதிப்பு சுமார் ரூ.111 கோடி மதிப்பாகும். விரைவில் மீட்கப்பட்ட இந்த இடங்கள் பொது ஏலத்திற்குக் கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE