போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி - செந்தில்பாலாஜியிடம் மீண்டும் விசாரணை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி, அமைச்சர் செந்தில்பாலாஜி பண மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக தமிழகத்தின் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் முழுமையாக முதலில் இருந்து மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக மின்துறை அமைச்சராக உள்ள செந்தில்பாலாஜி, கடந்த 2011 முதல் 2015 வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது, போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி அவர் பண மோசடியில் ஈடுபட்டதாக சென்னை அம்பத்தூரை சேர்ந்த கணேஷ்குமார், தேவசகாயம் உள்ளிட்டோர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் கொடுத்தனர்.

இதையடுத்து, சென்னை, கரூர், திருவண்ணாமலை, கும்பகோணம் உள்ளிட்ட இடங்களில் செந்தில்பாலாஜிக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர். இதில் அவருக்கு சொந்தமான சொத்து ஆவணங்கள், நகை ரசீதுகள், பல்வேறு நபர்களின் சுயவிவர குறிப்புகள், நேர்காணலுக்கான அழைப்பு கடிதங்கள், பணம் பெற்றுக்கொண்டதற்கான விவரப்பட்டியல் ஆகியவற்றை கைப்பற்றினர்.

செந்தில்பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார், உதவியாளர் சண்முகம், போக்குவரத்து கழக பணியாளர் ராஜ்குமார், அன்னராஜ், பிரபு மற்றும் சகாயராஜ் உள்ளிட்டோர் மீது போலீஸார் 3 மோசடி வழக்குகள் பதிவு செய்தனர்.

சென்னையில் எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்குகளில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னைஉயர் நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜியின் உதவியாளர் சண்முகம் வழக்கு தொடர்ந்தார். புகார் கொடுத்தவர்களுக்கு பணம் கிடைத்துவிட்டதால் சமரசமாக போக விரும்புவதாக, வழக்கு விசாரணையின்போது, இரு தரப்பிலும் கூறப்பட்டது.

இதை ஏற்று, செந்தில்பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார், வழக்கு தொடர்ந்த உதவியாளர் சண்முகம், போக்குவரத்து கழக பணியாளர் ராஜ்குமார் ஆகிய 4 பேர் மீதான வழக்கை மட்டும் ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொறியாளர் தர்மராஜ் என்பவர் மேல்முறையீடு செய்தார். ‘லஞ்சமாக பணம் பெற்றுக்கொண்டு பலரை அரசுப் பணியில் சேர்த்துவிட செந்தில்பாலாஜி முயன்றதால், தகுதி வாய்ந்த பலருக்கு அரசு வேலைவாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது. சமூகத்தை பாதிக்கும் குற்றங்கள் தொடர்பான வழக்கை ரத்து செய்ய கூடாது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்துள்ளது. ஆனால், குற்றத்தின் வீரியத்தை உணர்ந்தும், தமிழக அரசு தரப்புகூட இந்த வழக்கில் சமரசத்துக்கு ஒப்புக்கொண்டது அதிர்ச்சியளிக்கிறது’ என்று தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை அமல்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஒய்.பாலாஜி, கார்த்திகை ராஜன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கிடையே, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை குறித்து விசாரணை நடத்த செந்தில்பாலாஜிக்கு பிறப்பிக்கப்பட்ட சம்மனை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதை எதிர்த்து அமலாக்கத் துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த அனைத்து மனுக்களையும் மொத்தமாக விசாரித்த உச்ச நீதிமன்றநீதிபதிகள் கிருஷ்ண முராரி, வி.ராமசுப்பிரமணியன் அமர்வு, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளிவைத்திருந்தது.

இந்நிலையில், நீதிபதிகள் நேற்று தீர்ப்பளித்தனர். அவர்கள் தெரிவித்ததாவது: பணப் பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான அமலாக்கத் துறையின் சம்மனை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

போக்குவரத்து துறையில் வேலைவாங்கித் தருவதாக கூறி, செந்தில்பாலாஜி பண மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக தமிழகத்தின் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் முழுமையாக முதலில் இருந்து மீண்டும் விசாரணை நடத்த வேண்டும். இதற்காக தேவைப்பட்டால் போலீஸார் சிறப்பு விசாரணை குழு அமைத்துக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்படுகிறது. செந்தில்பாலாஜிக்கு எதிரான இந்த வழக்கில் 2 மாதத்தில் போலீஸார் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு அறிவுறுத்திய நீதிபதிகள், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்