மின்வாரிய ஒப்பந்தம்: 2 சங்கம் புறக்கணிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து குறிப்பிடாததால், மின்வாரிய ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் 2 தொழிற்சங்கங்கள் புறக்கணித்தன.

தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்களுக்கு கடந்த 2019 டிச.1-ம் தேதி முதல் வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு குறித்து, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் கடந்த வாரம் உடன்பாடு ஏற்பட்டது.

இந்நிலையில், இந்த உடன்பாடு தொடர்பாக மின்வாரிய தலைமையகத்தில் பதிவு செய்யப்பட்ட 32 தொழிற்சங்க நிர்வாகிகள் இந்த ஒப்பந்தத்தில் நேற்று கையெழுத்திடுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், தங்களது சில கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து ஒப்பந்தத்தில் குறிப்பிடாததால், ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் அதிமுக அண்ணா தொழிற்சங்கம் மற்றும் தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு ஆகியவை புறக்கணித்தன.

இதுகுறித்து, தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் பொது செயலாளர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மின்வாரியத்தில் இதுவரை 11 முறை ஊதிய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்கள் செய்யப்பட்ட இடைப்பட்டக் காலத்தில் பணியில் சேர்ந்தவர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது 9,613 கேங்மேன் தொழிலாளர்களும், வாரிசு அடிப்படையில் வேலைக்குச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கும் இந்த ஊதிய உயர்வு கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற மின்வாரியம் முன்வராததால் நாங்கள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. இதுதொடர்பாக, மின்வாரிய தலைவரிடம் நாங்கள் கோரிக்கை மனு அளித்துள்ளோம். இவ்வாறு ராஜேந்திரன் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE